தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் அணிந்திருக்கும் சயனைட் குப்பி மற்றும் விடுதலைப் புலிகளின் அடையாளங்களுடன் முகமாலைப் பகுதியில் பெண் போராளி ஒருவருடையது எனக் கருதப்படும் மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுவதாகப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவற்றை அகழ்வதற்குப் பொலிஸார் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தனர்.
நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு அமைய மாவட்ட நீதவான் முன்னிலையில் கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போதும் பெண்கள் அணியும் ஆடைகளுடன் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதத் தளபாடங்களுடன் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றுடன் காணப்பட்ட விடுதலைப்புலிகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தும் இலக்கத்தகடும் மீட்கப்பட்டிருந்தது. அந்த தகட்டில் காணப்பட்ட எழுத்துக்கள் விடுதலைப்புலிகளின் பெண்கள் படையணியான சோதியா படையணிக்குரியது எனத்தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் த.வி.பு. ஞா – 109 என்றஇலக்கமுடைய தகடு ஒன்றுடன் பெண்களின் ஆடைகள் மற்றும் பச்சை நிறத்திலான சீருடைகள் என்பவற்றுடன் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மீட்கப்பட்டவரும் சோதியா படையணிப் போராளியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
நேற்றைய அகழ்வின்போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட 40எம்.எம். குண்டு, கைக்குண்டு, மகசின் 02, தோட்டாக்கள் 34 உட்பட்ட வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ள. அவற்றில் குண்டு மற்றும் கைக்குண்டு என்பவற்றை செயலழிக்கச் செய்யமுடியாது என்பதால் அவற்றை அழிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் த.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய அகழ்வு நடவடிக்கை மாலை 5.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 09ஆம்திகதி மீண்டு முன்னெடுப்பதற்கும் நீதிபதி பணித்துள்ளார் .