மீண்டும் கனடாவில் தாக்குதல் – இந்தியா மீது சந்தேகம்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சீக்கிய அமைப்பின் தலைவருக்கு நெருக்கமானவரின் வீட்டின் மீது தூப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது தொடர்பில் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கனேடிய தகவல்கள் கடந்த திங்கட்கிழமை(12) தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக்கொண்ட காலிஸ்த்தான் ஆதரவு அமைப்பின் தலைவரான குர்வத்சிங் பன்னும் என்பவர் மீது இந்தியா கொலை முயற்சியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்திய அமெரிக்கா கடந்த வருடம் அதனுடன் தொடர்புடைய நபரையும் கைது செய்திருந்தது.

இந்த நிலையில் பன்னுமுக்கு நெருக்கிய நண்பரான இந்திரஜித்சிங் கோசல் என்பவரின் வீட்டு ஜன்னலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அடையாளங்களை வீட்டு திருத்த வேலைகளுக்காக வந்தவர்கள் கண்டறிந்து காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

வீட்டில் திருத்தவேலைகள் இடம்பெறுவதால் தாக்குதல் நடந்த சமயம் அங்கு யாரும் இருக்கவில்லை எனவும், இது உயிர் அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கையா என தாம் விசாரித்துவருவதாகவும் கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிம்ரஞ்சித் சிங் என்ற பன்னுமின் மற்றுமொரு நண்பர் மீது கனடாவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சில தினங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் தொடர்பில் இரு கனேடிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரொறொன்டோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை கடந்த வாரஇறுதியில் கோசல் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை என இந்தியா தெரிவித்துவருகின்றது.