மாவீரர் வாரம் இறுதி நாள் – காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

470 Views

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா

****************

சாவுக்கே
சாவதைக் காட்டியவர்கள்
வாழ்வுக்கே
விதையாகிப் போனவர்கள்
கொள்கைக்கே
வாழ்க்கைப் பட்டவர்கள்
விடுதலைக்கே

வாழ்க்கை கொடுத்தவர்கள்
ஈழத்துக்கே
இவர்கள் காவல்தெய்வங்கள்
எடடா
கையில் தீபத்தை
அடியடா
பறையிசை அகிலம் கேட்க
ஏழாம்நாளில்
வந்து நிற்கிறோம்….

 

ஈழத்தாயே உன்தன்
கருவறைகூடப்
புனிதம் கண்டது
புனிதர்களையெல்லாம்
புதைத்ததால் இப்போ
புனிதம் கண்டது…
சாவே உனக்கு
அச்சமே இல்லையாம்
சொன்னது பொய்யெனப்
புதுக்கதை எழுதிய
கரும்புலிகளைப் பார்த்து
அச்சம் கொண்டதை
அஞ்சாமல் நீ சொல்லு…

அடிமைகளின் வாழ்க்கையே
அச்சத்தை விட்டு
வெளியே வா…
வாழ்க்கைக்கே
வாழ்க்கை தந்தவர்கள்
இவர்களெனக்
கார்த்திகைப் பூக்களால்
சாமத்துப் பூசை செய்…
கொள்கையே உனக்கு
வாழ்க்கைப் பட்டவர்கள்
பிரிந்து சென்றதையே
கண்டதாய்க் கூறிக்-
கண்ணீர் விட்டதைத்
துடைத்து விடு
இறுதி வரைக்கும் -உனக்கு
வாழ்க்கை கொடுத்தவரை
விளக்கேற்றித் தொழு…

அகிலத்தில் இருக்கும்
சிறைகளில் எல்லாம்
அடிமையாய்க் கிடந்த
விடுதலையே…உனக்கு
விடுதலை எடுக்கப்
போராடிப் போன
புரட்சி விதைகளின்
கருவறைகளைக்
கண்ணீரால் கழுவு….
வாழ்க்கை கொடுத்தவர்கள்
இவர்கள் அல்லவா..?
ஈழத் தாயே -நீ
பெருமை கொள்
இவர்கள் எல்லாம்
உனது பிள்ளைகள்
என்பதை எண்ணிப்
பெருமை கொள்….

அகிலத் தமிழரே….
அடியுங்கள் பறையை
ஏழாம் நாளினில்
திருவிழாச் செய்வோம்
உரத்த குரலினில்
உரிமையைக் கேட்டு
ஊர்வலம் செல்வோம்
எங்களைச் சுற்றிக்
காவல் தெய்வங்கள்
அச்சம் எதுக்கென
அடியடா பறையை….
ஆதிக்கப் பேய்கள்
ஈழத்தை விட்டு
ஓட வேண்டும்
உலகம் எம்மைப்
பார்க்க வேண்டும்…
ஈழம் நிச்சயம்
மலர்ந்திட வேண்டும்

அதனை எண்ணி
எடடா பறையை
அடித்துச் சொல்வோம்
எங்களின் இலக்கை
இதற்காய்த் தானே
எங்கள் மண்ணின்
காவல் தெய்வங்கள்
யாகம் செய்தனர்….
கார்த்திகை மாதத்
திருவிழாச் செய்து
இந்த நாளினில்
உறுதி எடுப்போம்
இலக்கை நோக்கிப்
பயணம் போகத்
துணைக்கு வருவார்…
எங்களின்
காவல்த் தெய்வங்கள்
எடுப்போம் பறையை
அகிலம் அதிர….
அடியடா அதை…..
இன்று ஏழாம் நாள்..!!

றோய்

Leave a Reply