பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால் நாட்டின் கௌரவம் பொருளாதாரம் அருமை பெருமையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. இனவாதம், மதவாதம், சுயநலவாதம், பிழைப்புவாதம் போன்ற முடக்குவாதங்களால் இந்நாட்டு பொருளாதாரம், ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளன என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு கலப்புபட பொருளாதார முறையைப் பின்பற்றுவதோடு ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஏற்றுமதி மூலம் கிடைக்கின்ற அந்நியச் செலாவணி உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டிய அதேவேளை இறக்குமதிக்காகச் செலவு
செய்யப்படுகின்ற செலவீனம் குறைந்த மட்டத்தில் இருந்தால் தான் ஒரு நாட்டில் பொருளாதரம் வளர்ச்சியினை எட்ட முடியும்.

எமது நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற அடைமொழியோடே அழைக்கப்பட்டு வருகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடு என்ற
அடைமொழியை நாம் இன்னும் எட்டவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அணுகுண்டுகளால் நிர்மூலமாக்கப்பட்ட ஜப்பான் நாடு அபிவிருத்தியில் உயர்ந்து நிற்கின்றது.

எமது நாட்டின் ஏற்றுமதியின் அளவு ரீதியான தொகை அதிகரித்தால் மட்டும் போதாது ஏற்றுமதிப் பொருட்கள் தரம் வாய்ந்தததாக அமைய வேண்டும். சர்வதேசப் போட்டிச் சந்தையில் எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு நல்ல கேள்வி இருக்க வேண்டும். அதற்காக இப்பொருட்களின் தரத்தினை உய்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.

எமது நாடு அரசியற் தவறுகள், பொருளாதாரத் தவறுகள், சமூகத் தவறுகள் போன்றவற்றால் ஆட்சியாளர்களாலும் அடிப்படைவாதிகளாலும் குட்டிச்சுவராக்கப்பட்டிருக்கின்றது. கடன் சுமை கொண்ட நாடாகவும், துண்டுவிழும் தொகை கொண்ட நாடாகவும் எமது நாடு மறைகணிய பெறுமானத்தை காட்டி வருகின்றது. எனவே நாம் பல்வேறு முற்போக்கான செயற்பாடுகளைக் கடைப்பிடித்தாலே ஒழிய எமது நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியாது.

உலகமானது வேட்டை யுகத்தில் இருந்து விவசாய யுகத்தை நோக்கி நகர்ந்து, கைத்தொழில் யுகத்தை நோக்கி முன்னேறி, தற்போது தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப அரசியலாளர்கள், பொருளாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் மாற்றமடைய
வேண்டும். “தக்கன பிழைக்கும் தகாதன அழியும்” என்பது கூர்ப்புத் தத்துவமாகும். எனவே மாற்றத்திற்கு ஏற்ப எமது நாடும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சில பிரதேச செயலகப் பிரிவுகள் கூடுதலான சீர்குலைவுகளை அடைந்துள்ளன. எனவே ஏற்றுமதிகளை ஏற்படுத்தக் கூடிய கைத்தொழிற்சாலைகளை மாகாணங்கள், மாவட்டங்கள், தொகுதிகள், பிரதேசங்கள் தோறும் சாத்தியவள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்திற்கு முற்பட்ட காலத்திலும் யுத்த காலத்திலும் பல கைத்தொழிற்சலைகள் இயங்கியும், இயங்கத் தொடங்கும் நிலையிலும் காணப்பட்டன. வாழைச்சேனை காகித ஆலை, தேவபுரம் அரிசி ஆலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, இலுப்படிச்சேனை ஓட்டுத் தொழிற்சாலை, கும்புறுமூலை அரச அச்சகம், போன்றவற்றை இதற்கான
உதாரணங்களாகக் கூறலாம். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட எந்தவொரு தொழிற்சாலையும் திறக்கப்படவில்லை. இவை தொடர்பில் நாங்கள் பல தடவைகள் எடுத்தியம்பியும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இருக்கின்றன.

ஆனால் பிறண்டிக்ஸ் என்படும் ஆடைத் தொழிற்சாலையொன்று ஆரையம்பதி கோவில்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்தொழிற்சாலையில் நான்காயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கதொன்றாகும். இத்தெழிற்சாலை மாத்திரம் இந்த மாவட்டத்தில் பொருளாதாரத்தினை
செழுமைப் படுத்துவதற்கு போதுமானதல்ல. எனவே எமது சூழல், வளக் கிடைப்புகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு சூழலைப் பாதிக்காத பல தொழிற்சாலைகளை நிறுவ வேண்டிய தேவை உணரப்படுகின்றது.

அந்த வகையில் காகித ஆலை, அரிசி ஆலைகள், ஓட்டுத் தொழிற்சாலைகள், பாற்பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகள், மீன்பிடிக் கைத்தொழிற்சாலைகள், அரச அச்சகம், போன்றவற்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கக் கூடிய சாத்திய நிலைமைகள் காண்படுகின்றன.

மேலும் எமது விளைபொருட்களுக்கு பெறுமதியினை அதிகரிக்கக்கூடிய விதத்தில் அவற்றை கைத்தொழிலினூடாக உயர்த்த வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன. இந்த மாவட்டம் தன்நிறைவுள்ள மாவட்டமாக மாற்றுவதற்கு பல கருத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு ஆலைகளை ஆரம்பிக்க வேண்யுள்ளது.

அனைத்திற்கும் மேலாக எமது நாட்டில் புறையோடிப்போய் இருக்கின்ற தேசியப் பிரச்சினையைத் தீர்க்காமல் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. பன்மை சமூகங்களிடையில் பரஸ்பர புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு என்பவற்றினூடாக அரசியல்வாதிகளால் தேசிய இன்பிரச்சினைக்குரிய நிலையான தீர்வு எட்டப்பட வேண்டும்.
எமது புத்திஜீவிகள் அந்நிய நாட்டின் சேவகர்களாக இல்லாமல் எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஏற்றவிதத்தில் இங்குள்ள தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பண்டங்கள் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை விட இங்குள்ள புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை இந்த நாட்டில்
பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புத்திஜீவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள் என்பதை விட அரசியல்வாதிகளின் தப்புகளால் அவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர் என்றே கூற வேண்டும்.

இது எமது நாட்டிற்கு ஒரு சாபக் கேடாக உள்ளது. புத்திஜீவிகளை ஏற்றுக் கொள்ளுகின்ற நாடுகள் அபிவிருத்திப் பாதையில் செல்லுகின்றன புத்திஜீவிகளை இழக்கின்ற நாடுகள் அதிருப்திப் பாதையில் செல்லுகின்றன எனவே பெறுமதியான மனித வளத்தை இழக்காமல் இருப்பதற்கு அறிவியல் ரீதியாகச் சிந்தித்து நல்ல பொறிமுறைகளை ஆட்சியாளர்கள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

அடிப்படைவாதம், பிற்போக்குவாதம், உழுத்துப்போன, வெளுத்துப்போன சிந்தனைகள் பிழைப்புவாதம், சுயநலவாதம் என்பன எமது நாட்டின் தேசிய ஐக்கியத்தையும் பொருளாதாரத்தையும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்களால் ஆளப்பட்டு வந்திருக்கின்றது. உண்மையில் இவர்கள்தான் ஆட்சி செய்தார்களா? இவர்களை ஆட்டிப் படைக்கின்ற பிற்போக்குவாத, அடிப்படைவாத மறைகணிய மனப்பாங்குகள் ஆட்சி செய்துள்ளனவா? என்று நாம் சிந்திக்க
வேண்டியுள்ளது. அழகான, அருமையான இந்த நாட்டை அடிப்படைவாதிகள்
அசிங்கப்படுத்தியுள்ளனர். இனவாதம், மதவாதம், சுயநலவாதம், பிழைப்புவாதம் போன்ற முடக்குவாதங்களால் இந்நாட்டு மக்கள் அடக்கப்பட்டு வந்தனர், பொருளாதாரம் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளன.

எனவே ஏற்றுமதி அபிவிருத்திகள் மூலமாக அபிவிருத்தி வரிகள் மூலமாக இந்த நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் மறைகணிய, எதிர்க்கணிய, மனப்பாங்குகள் அடிப்படைவாதிகளின் மனங்களில் இருந்து களையப்பட வேண்டும். பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால் நாட்டின் கௌரவம்
நாட்டின் அருமை பெருமையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.

எனவே கடந்தகாலப் படிப்பினைகளை படிப்புகளாக எடுத்துக் கொண்டு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் செழிப்பாக்கிக் கொள்வோம் என்று தெரிவித்தார்.