“புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது  மகிழ்ச்சி” -அருந்ததி ராய்

322 Views

“புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது  மகிழ்ச்சியளிக்கிறது” என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் பாஜக வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அருந்ததி ராய், அந்தப் புத்தகம் இத்தனை நாள் பாடத் திட்டத்தில் இருந்ததே தனக்குத் தெரியாது எனக் கூறியிருக்கிறார்.

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் ” Walking With The Comrades” என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் 2017ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருந்தது.

1 70  "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது  மகிழ்ச்சி” -அருந்ததி ராய்

இந்நிலையில் கடந்த வாரம் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த சிலர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பிச்சுமணியை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து அவர்கள் துணைவேந்தரிடம் அளித்த மனுவில் ‘கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பாடம் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் மீது நேரடியாக நக்சல் மற்றும் மாவோயிச கருத்துக்கள் திணிக்கப்பட்டு வந்துள்ளன. தேச விரோத கருத்துகளைத் தெரிவிக்கும் இந்த புத்தகத்தை பாடத் திட்டமாகச் சேர்த்த பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏபிவிபி மாணவர் அமைப்பு வண்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் மன்னிப்பு கேட்பதோடு மட்டுமில்லாமல் பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக புத்தகத்தை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் தற்போது அந்தப் புத்தகம் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக மா. கிருஷ்ணன் எழுதியிருக்கும் My Native Land: Essays on Nature என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய புத்தகம் நீக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், “என்னுடைய புத்தகமான Walking with the Comrades ஏபிவிபியின் அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் பணிந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, வருத்தத்தைவிட மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஏனென்றால், அது பாடத் திட்டத்தில் இடம்பெற்றதே எனக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகளாக அது கற்பிக்கப்பட்டது சந்தோஷம்தான். இப்போது பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து எனக்கு பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. ஒரு எழுத்தாளராக எழுதுவது மட்டும்தான் என் வேலை. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதற்காக போராடுவது என் வேலையில்லை. இதை மற்றவர்கள் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது பரவலாக படிக்கப்படும் . எழுத்தாளர்கள் படிக்கப்படுவதை இம்மாதிரி தடைகளால் ஏதும் செய்ய முடியாது. தற்போதைய ஆட்சியில் இலக்கியம் குறித்து இம்மாதிரி குறுகிய, மேலோட்டமான, பாதுகாப்பு உணர்வற்ற தன்மையை வெளிப்படுத்துவது, அந்த ஆட்சியை விமர்சிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை ஆதரிப்பவர்களுக்கும்கூட பின்னடைவாகத்தான் இருக்கும். உலக அரங்கில் ஒரு மரியாதையையும் கண்ணியத்தையும் பெற விரும்பும் ஒரு சமூகத்தின், நாட்டின் அறிவுஜீவித் திறனை இது கட்டுப்படுத்தும்”  என்றார்.

இந்தியாவின் மத்திய மாநிலங்களின் அடர்ந்த வனப் பகுதிகளில் மவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அப்பகுதிகளுக்குச் சென்ற அருந்ததி ராய், மாவோயிஸ்டுகளின் அனுபவத்தையும் ஆயுதம் ஏந்துவதற்கு அவர்கள் சொன்ன காரணங்களையும் தொகுத்து ‘Walking With The Comrades” என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் 2011ல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply