பல்கலை மாணவர்களுக்கிடையில் மோதல் – விரிவான அறிக்கை கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென, பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனி நபர் விசாரணை ஆயத்தின் தலைவர் ஓய்வு நிலைப் பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தினால் இந்த விரிவான விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவான அறிக்கை அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு, விசாரணை அதிகாரியினால் முன் மொழியப்பட்டுள்ள சிபார்சுகளின் அடிப்படையில் பல்கலைக் கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு பரிந்துரை முன்வைக்கப்படும்.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகளும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்களும், மாணவ ஆலோசகர் ஒருவரும், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி (புறொக்டர்) ஒருவரும், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவருமாக இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப்பதிவாளர் செயலாளராகவும் செயற்படுகின்றார்.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாகப் பேரவையினால் இற்றைப்படுத்தப்படும் தீர்மானம் துணைவேந்தரால் நடைமுறைப்படுத்தப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

கடந்த மாதம் கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

எனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று பேரவையினால் அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர்.

மறுநாள்இ 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது.

தனிநபர் விசாரணை ஆயத்தின் விசாரணைகள் கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது. தாக்குதல் சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் சாட்சியமளித்திருந்தனர். அதன் பின், சம்பவம் தொடர்பில் – சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டாம் வருட, மூன்றாம் வருட மாணவர்கள் சாட்சியமளித்திருந்தனர். அதன் பினனர் கலைப்பீடாதிபதியின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.