பிரித்தானியாவை தளமாகக் கொண்டவரும் சீக்கிய மக்களுக்காக குரல் கொடுத்தவருமான வழக்கறிஞர் ஜக்தார் சிங் ஜோஹால் இந்தியாவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திருமண நிகழ்வு ஒன்றிற்கு அவர் சென்றபோதே கைது செய்யப்பட்டிருந்தார். இந்த கைதுக்கான தகவல் பிரித்தானியாவின் புலானாய்வுத்துறையினரால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய சிறையில் அவரின் உடலில் மின்னாரம் பாச்சப்பட்டு துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவரின் கைதுக்கு பின்னால் பிரித்தானியாவின் புலனாய்வுத்துறை இருப்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவரின் சகோதரரும், வழக்கறிஞரும் மற்றும் தொழிற்கட்சியின் மேற்கு டம்பன்செயர், ஸ்கொட்லான்ட் பகுதி நகரசபை உறுப்பினருமான குர்பிரீட் சிங் ஜோஹால் தெரிவித்துள்ளார்.
ஜக்தார் சிங் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Reprieve என்ற குழுவில் இணைந்து பணியாற்றியிருந்தார். இது ஒரு எழுந்தமானமான கைது அவர் மீதான விசாரணைகள் நீதியாக நடப்பதற்கு நாம் இந்தியாவை வலியுறுத்துவோம் என அவரின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானியாவின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதால் அவருக்கு மரணதண்டனை வழங்கப்படலாம் என வழக்கறிஞர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.