பாலியல் புகார்களில் தினமும் 4  குழந்தைகளுக்கு நீதி மறுப்பு- ஆய்வில் தகவல்

530 Views

இந்தியாவில் பாலியல் புகார்களில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், தினமும் 4  குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட தரவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், 2017 முதல் 2019 ஆண்டு வரையிலான காலத்தில் போக்சோ வழக்குகளைக் காவல்துறை முடித்த விதம் குறித்து கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆய்வு செய்துள்ளது.

“காவல்துறை வழக்கை முடிக்கும் விதம் – போக்சோ சட்டம் 2012ன் கீழ் பதியப்பட்ட வழக்குகள் பற்றிய விசாரணை” என பெயரிடப்பட்ட ஆய்வறிக்கையை அந்த அறக்கட்டளை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 8) வெளியிட்டது.

2017 முதல் 2019 வரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமலே முடித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக, ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

“குழந்தைகளுக்கு எதிரான சிறப்பு சட்டத்திற்கு அவசியம் இருப்பதை அறிந்து அரசு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைத் தடுக்கும் சட்டம் 2012 (போக்சோ)ஐ கொண்டு வந்தது.

உண்மையில் அதன் அமலாக்கம் மிகவும் மோசமானதாக இருக்கின்றது” என ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 3,000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு நியாயமான விசாரணை இல்லாததால் நீதி மன்றம் செல்லவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் காவல்துறையால் வழக்கு முடிக்கப்படுவதால், ஒவ்வொரு நாளும் 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்றும், அந்த ஆய்வு கூறுகின்றது.

மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில், 51 விழுக்காடு வழக்குகள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி மாநிலங்களில் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும், காவல்துறை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் பிரிவும், நீதிமன்றங்களில் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதலாக விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் தேவைப்படுகின்றன என கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் ஆய்வு கூறுகின்றது.

Leave a Reply