பலாலி விமான நிலையத்தை வைத்து வடக்கு மக்களின் வாக்கை சூறையாட முயற்சி

838 Views

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக திறந்து வைத்து அதனூடாக வடக்கு மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன, இந்த நடவடிக்கை தேர்தல் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் சாடியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் திரைமறைவான ஒப்பந்தங்களை செய்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தாலும், மறுபுறத்தில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை அறிவித்திருப்பதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன சாடியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வந்த யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகதி அதிகளவில் பூர்த்தி செய்வதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

55251 pala பலாலி விமான நிலையத்தை வைத்து வடக்கு மக்களின் வாக்கை சூறையாட முயற்சிபலாலி சர்வதேச விமான நிலையம்,  விமான சேவைகளுக்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான செஹான் சேனசிங்க, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவே அவசர அவசரமாக பலாலி விமான நிலையத்தைத் திறப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக திறந்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனூடாக தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது அப்பட்டமாக தெரிகின்றது. யாரை இந்த அரசாங்கம் ஏமாற்றுகின்றது. வடக்கிலுள்ள தமிழ் மக்கள் 2015ஆம் ஆண்டு ஏமாற்றப்பட்டதைப் பார்க்கிலும் இருமடங்கில் அவர்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றது. திறக்கப்படவுள்ள விமான நிலையம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா? சர்வதேச பாதுகாப்புக் கட்டமைப்பிலிருந்து அனுமதி கிடைத்திருக்கின்றதா? யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்? தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வடக்கு மக்களுக்கு இவ்வளவு செய்திருக்கின்றோம் என்பதைக் காண்பிக்கவா இது செய்யப்படுகின்றது.

palali airport பலாலி விமான நிலையத்தை வைத்து வடக்கு மக்களின் வாக்கை சூறையாட முயற்சிஇதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் மகிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க வலியுறுத்தினார்.

வடக்கிலுள்ள அரசியல்வாதிகளை இந்த அரசாங்கம் பாதுகாத்து வருகின்ற போதிலும் வடக்கு மக்களை அரசாங்கம் கவனிப்பதே இல்லை. வடக்கு மக்களின் வாக்குகளை பெறுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆகவே சஜித் பிரேமதாசாவுடன் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? நிபந்தனைகள் என்ன?  நிபந்தனைகளை சஜித் பிரேமதாசா அறிவாரா? அது குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்களது மக்களுக்கு ஒன்றையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் கூறினாலும் இன்னுமொரு புறத்தில் அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என்று கூறுகின்றார்கள். அதனால் இந் ஒப்பந்தம், நிபந்தனைகள் என்ன என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகள் ஒன்றையொன்று குற்றஞ் சாட்டுவதன் மூலம் இரு கட்சிகளினதும் உண்மை முகங்கள் வெளிவரும் என்பது உண்மை. இதற்கமைவாக வடக்கு மக்களுக்கு தாங்கள் செய்யவிருக்கும் திட்டங்கள் உண்மையானதா, பொய்யானதா என்பதை எதிர் எதிர் கட்சிகள் போட்டுடைத்து உண்மையை வெளிக் கொண்டு வருவார்கள் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை.

Leave a Reply