பசுக்களுக்கு கோட் வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

குளிரிலிருந்து பசுக்களை பாதுகாக்க அவற்றுக்கு கோட் வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவின் அரசியல் கோஷத்தில் முக்கியப் புள்ளி பசுப் பாதுகாப்பு. மேலும் இந்துக்களின் புனித விலங்கான பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தனது அரசின் கடமை என்பது முதல்வர் யோகி ஆதித்யநாதின் நிலைப்பாடு.

அந்த வகையில், உத்தரப்பிரதேச அரசு நடத்தும் பசு முகாம்களில் உள்ள பசுக்களை இந்த ஆண்டு குளிர் காலத்தில் இருந்து அவைகளைப் பாதுகாக்க அவற்றுக்கு மேல் கோட், திரைச் சீலைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சணல் பைகளை கொண்டு பசுக்களுக்கான மேல் கோட்டுகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி, அயோத்தி உள்ளிட்ட சில பகுதிகளில் பசுக்களை குளிரிலிருந்து காக்கும் வகையில், நெருப்பு மூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.