நேபாளத்தில் புதிய வரைபடம் ஏகமனதாக நிறைவேற்றம்

416 Views

உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

நேபாள நாடாளுமன்றத்தின் 258 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஒருவர்கூட இதற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

நாடாளுமன்ற மேலவையில் இந்த திருத்தம் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. மேலவையும் ஒப்புதல் அளித்தபின் நேபாள ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளிப்பார்.

இந்த வரைபடத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி, இமய மலையின் மேற்பகுதியில் உள்ள ஒரு சிறிய இடமாக இருந்தாலும், உலகின் மிகப்பெரிய சக்தியாக உள்ள இந்தியா- சீனா ஆகிய இரு பெரிய நாடுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கிவிட்டது.

சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்தியா போட்ட புதிய பாதை, அதை இந்தியா தனது வரைபடத்தில் சேர்த்ததும் பதற்றம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

இதற்கு மேலே, சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் வடக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பல வாரங்களாக தொடர்ந்து ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தனர்.

இந்தியாவின் சில அதிகாரிகளும், ஊடகங்களும், நேபாளம் தனது வரைபடத்தை மாற்ற சீனாவே தூண்டுதலாக இருக்கிறது என்று கூறினாலும், அதற்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்தியாவும், நேபாளமும் 1,880 கி.மீ தூர எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. அதில் 98% எல்லைப்பகுதி தெளிவாக இருக்கிறது. ஆனால், மீதமுள்ள இடங்களான லிபுலேக் கணவாய், காலாபானி மற்றும் லிம்பியதுரா ஆகிய பகுதிகள் இன்னும் சர்ச்சைக்குரிய இடங்களாகவே இருக்கின்றன.

இந்த மூன்று பகுதிகளும் சேர்த்து 370 சதுர கி.மீ அளவு கொண்டதாக உள்ளதாக நேபாள அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply