தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)

கோபுரங்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்குபொறுப்புக்கூறலைச் செய்வது யார்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் இறுதி பகுதி

தற்போது யாழ்.மாநகர சபைகளுக்குள் முறையான அனுமதியற்ற வகையில் நிறுவப்படும் கோபுரங்களால் ஆபத் துக்கள் ஏற்படுமாயின் அதற்கு பொறுப்புக்கூறுவது யார் என தமிழர் கல்வித்துறைக்கு அரும்பணியாற்றி யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி நாடாளாவிய ரீதியில் தனக்கென்று தடம்பதித்திருந்த பொருளியல் ஆசான் மறைந்த வரதாராஜனின் புதல்வரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வ.பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கேள்வி எழுப்பியுள்ளார்.  அச்செவ்வியின் இறுதிப் பகுதி வருமாறு…

அது மட்டுமல்ல குறித்த கோபுரத்தின் தடிமன் என்ன? அது என்ன உலோகத்தால் செய்யப்பட்டது என்பது கூட எமக்கு தெரியாது. குறித்த கோபுரங்களின் அடித்தளத்தின் உறுதியின் தன்மை மற்றும் கோபுரத்தின் உறுதியின் தன்மை போன்ற விபரங்கள் எதுவும் இல்லாமல் அது நிறுவப்படுகின்றது. இந்நிலையில் அக்கோபுரம் சரிந்து விழாது என்பதனை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்.

அத்துடன் 1986ஆம் ஆண்டு 03 மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானப் அறிவித்தலின் படி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டட விதிகளில் பவுண்டேசன்ஸ் என்ற தலைப்பின் கீழ் உள்ள பிரிவு 55 – 57 க்கு அமைவாக அனுமதி பெறப்படல் வேண்டும் ஆனால் அந்த அனுமதியும் பெறப்படவில்லை. 2009 ஏப்பிரல் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவித்தலின் படி 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் அனுமதி பெறவேண்டும்.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத் திற்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதை நாங்கள் நிராகரித்து விட்டோம். நாங்கள் வெளிநாடு செல்லவில்லை. ஆனால் முதல்வர் மாகாணசபை உறுப்பினராக இருக்கும் போதும் தற்போது முதல்வராக இருக்கும் போது பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். ஆகவே அவருக்கு உண்மையான சிமாட் லாம் போல்கள் தெரியும். தற்போது நிறுவப்படுகின்றவை முதல்வர் கூறுவதுபோன்று இங்கு நிறுவப்படுவன எவையும் சிமாட் லாம் போல்கள் அல்ல.

கேள்வி:- தற்போது கோபுரங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றுக்கான அனுமதி பெறுவதிலிருந்து முறையான ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை என்று எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளீர்கள்?

பதில்:- யாழ்.மாநகர சபையின் ஆதனத்தை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடுகின்ற போது மாநகர சபைக்கட்டளைச்சட்டத்தின் 40(எப்)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய 35,37ஆம் பிரிவுகளின் பிரகாரம் உரித்தாக்கப்பட்ட ஆதனங்கள் அல்லது வேறுவகையாக சபைக்கு உரித்தாக்கப்பட்ட ஆதனங்களை விற்றல், குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரின் அனுமதி பெறப்படவேண்டும். அதற்போது அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஆளுனரிடம் அனுமதி பெறவேண்டும்.

குறித்த ஆதனத்தின் குத்தகைப்பெறுமதி தொடர்பாக விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படுவதோடு,  பெறுகை நடைமுறைகளுக்கமைவாக ஆதனங்களைக் குத்தகைக்கு வழங்கி சட்டரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான எந்த நடைமுறையும் இதில் பின்பற்றப்படவில்லை.

மாநகர கட்டளைச்சட்டத்தின் 227 இன் பிரகாரம் 15000 ரூபாவிற்கும் ஒரு வருடத்திற்கும் குறைந்த ஒப்பந்தத்திற்கு யாழ்.மாநகர சபை ஆணையாளரும், மாநகர கட்டளைச்சட்டத்தின் 228 இன் பிரகாரம் 15000ரூபாவிற்கு மேற்பட்ட தொகைக்கும் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத்திற்கு யாழ்.மாநர சபை முதல்வரும் ஆணையாளரும் கையப்பமிடவேண்டும் என்பதுடன் மாநகர இறப்பர் முத்திரையும் பதிக்கப்பட வேண்டும். அவ்விடயமும் நடைபெற்றிருக்கவில்லை. மாறாக, குறித்த ஒப்பந்தம் 15000 ரூபாவிற்கும் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தமாக இருக்கின்றபோதும் அவ் ஒப்பந்தத்தில் யாழ்.மாநகர சபை முதல்வர் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளார். இது சட்ட ஏற்பாடுகளை மீறும் செயலாகும்.

அத்துடன் 11 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2008 அம் திகதி இலங்கையில் உள்ள மாநகர முதல்வர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபை தவிசாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு திட்டமிடல் குழுவை அமைத்து நகர அபிவிருத்தி தொடர்பான மற்றும் கட்டிடங்கள் தொடர்பான விண்ணப்பங்களை குறித்த திட்டமிடல் குழுவில் விவாதித்து அதன் அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்படவேண்டும் என்று உள்ளது. யாழ்.மாநகர சபையில் குறித்த திட்டமிடல் குழு இருக்கின்ற போதிலும் குறித்த திட்டமிடல் குழுவிற்கே தெரியாமல் இக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் உரிய நிர்வாக நடைமுறைகள் அனுமதிகள் எதுவும் இன்றியே இவ்தொலைத் தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்பது வெளிப்படை

 கேள்வி:- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் கோபுரங்களை அமைப்பதற்கு விசனம் வெளியிட்டுள்ளீர்களே?

பதில்;- நல்லூர் கோவிலைச் சுற்றி நான்கு கோபுரம் அமைக்கப்படுகின்றமைக்காக விசனம் வெளியிடவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 200, 300 மீற்றர் இடைவெளிக்குள் கோபுரங்களை அமைப்பதற்கான பின்னணியையே வெளிப்படுத்துகின்றேன். எல்லா இடத்திலும் தூர தூர இடங்களில் இந்த கோபுரங்களை அமைத்து விட்டு நல்லூரில் மட்டும் ஏன் 4 கோபுரங்களை அமைக்கின்றார்கள் என்றால், நல்லூர் கோவில் திருவிழா காலங்களில் அங்கு இலட்சணக்கான மக்கள் வருவார்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரலை செய்வதற்கு வருவார்கள்,

5ஜி தொழில் நுட்பத்தில் விரும்பிய சாதனத்துக்கு விரும்பிய வேகத்தை கொடுக்கலாம் அதாவது ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு இந்த அளவு வேகத்தையும் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இன்னொரு வேகத்தையும் கொடுக்கலாம். இதனை மையப்படுத்தியே இவ்வாறான கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

கேள்வி:- யாழ்.மாநகர முதல்வர் நடத்திய ஊடக வியலாளர் சந்திப்பில் கோபுரங்களை அமைப்பதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளாரே?

பதில்:- முதலாவதாக,  யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள கோபுரத்தில் அன்டனாக்கள்  எவ்வாறு யாருடைய அனுமதியுடன் பொருத்தப்பட்டது, பொருத்தப்பட்ட அந்த அன்டனாக்கள் எந்த தொழில்நுட்பத்திற்குரியது. என்பதொரு கேள்வியாக இருக்கின்றது. அதனைவிடவும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் மூலமாக எழுப்பபட்ட வினாவுக்கு கிடைத்துள்ள பதில் கடித்தில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் எந்த ஒரு சிமாட் லாம் போல்களை நிறுவுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் குறித்த நிறுவனம் எந்தவித அனுமதியும் இல்லாத ஒரு சேவை வழங்குனர் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தகவலின் படி  இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் எந்த வித அனுமதியும் இல்லாமல் அதுவும் அனுமதிச்சான்றிதழ் இல்லாத ஒரு வழங்குனருடன் யாழ்.மாநகர சபை எவ்வாறு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது என்பது முதல் பிரச்சினை யாகின்றது. அடுத்து யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அனுமதியில்லாத ஒரு நிறுவனத்தின் நிர்மானங்களை எவ்வாறு நிறுவலாம்? என்பது அடுத்த பிரச்சினையாகின்றது.

இரண்டாவதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் இது தொடர்பில் தகவல் ஒன்றினை கோரியிருந்தேன். அதற்கு பதில் அளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையானது, யாழ்.மாநகரசபை மற்றும் ஆகியோருக்கிடையான ஒப்பந்தம் மூலம் பொருத்தப்படும் சிமாட் லாம் போல்களுக்கான  அனுமதி எதுவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பெறப்படவில்லை. மேலும் அதிகாரசபைக்குரிய வீதிகளில் இரண்டு சிமாட் லாம் போல்கள் அனுமதி பெறப்படாமல் நடப்பட்டுள்ளன. இது குறித்து யாழ்.மாநகர மேயருக்கும் யாழ்.மாநகர ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் என்றுள்ளது. ஆக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி பெறப்பட வில்லை என்பதும் உறுதியாகின்றதே.

கேள்வி:- நிர்மானிக்கப்படும் கோபுரங்களால் சூழலுக்கான ஆபத்துள்ளதாக கூறியிருந்தீர்களே?

பதில்:- ஆம், ஒரு உதாரணத்தினை முன்வைக்கின்றேன், கஸ்தூரியர் வீதியும் அரசடி வீதியும் இணையும் சந்தி. (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில்.) மூன்று மிகப் பிரபல்யமான பாடசாலைகள், இரண்டு பிரபல்யமான தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.

அண்மையில் சில மணித்தியாலங்கள் நீடித்த மழையால் இப்பிரதேசம் வெள்ளக்காடாக மாறிவிட்டது. அந்த வெள்ள நீர் கார்களுக்கு சார்ஜ் போடலாம் என்று கூறப்படும் சிமாட் லாம் போலின் அடித்தளத்தை சேதமாக்கிவிட்டது. அதன் அடித்தளத்திற்கு இட்ட மண் இடிந்து கீழ் இறங்கியதுடன் கரைந்தும் சென்று விட்டது

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஒரு கட்டுமாணம் அமைக்க வேண்டுமாயின் மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் யாழ்.மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் அக்கட்டிடத்தின் அடித்தளத்தின் உறுதிப்பாட்டினை உறுதிசெய்வற்காக உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும் என்பது சட்டம்.

இச் சட்டமே ஒரு சாமானிய பொதுமகன் தன் வீட்டு மதிலை கட்டுவதற்கு கூட பயன்படுத்தப்படுகின்றது. இதை மீறிச் செயற்பட்டால் உடனடியாக சட்டம் பாய்ந்து அம்மதில் கட்டுமானத்தை தடுத்து நிறுத்துகின்றது. ஆனால் இவ்வளவு பெரிய கோபுரம் அமைப்பது தொடர்பிலும் அதன் அடித்தளத்தின் உறுதிப்பாடு தொடர்பிலும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை அதாவது கட்டட அனுமதிச் சான்றிதழ் பெறப்படவில்லை.