சின்ஜாங் பிரதேசத்தில் சீனா மிகப்பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையானது மேற்குலக நாடுகளால் தயாரிக்கப்பட்டது எனவே வெளியிட வேண்டாம் என சீனா கேட்டுக்கொண்டபோதும், ஐ.நா அதனை வெளியிட்டுள்ளது.
உகுர் இன முஸ்லீம் மக்கள் உட்பட பல இன மக்கள் மீது சீனா மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதற்கான ஆதரங்கள் உள்ளன. பல காலமாக வட மேற்கு மாகாணங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களை விடுதலை செய்வதற்கு சீனா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை உலகில் வாழும் உகுர் இன மக்களின் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
ஆனால் அரசியல் நோக்கங்களுக்கான மேற்குலக நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வங் வென்பின் தெரிவித்துள்ளார்.