இரண்டாம் உலகப்போர் சேதம் – ஜேர்மனியிடம் பணம் கேட்கிறது போலந்து

இரண்டாவது உலகப்போரில் ஜேர்மனிய படையினரின் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட இழப்பீடாக 1.3 றில்லியன் டொலர்களை ஜேர்மன் அரசு தமக்கு வழங்கவேண்டும் என போலந்தின் மூத்த அரசியல்வாதியும், நீதி மற்றும் சட்டம் கட்சியின் தலைவருமான ஜரஸ்லோ கசின்ஹி கடந்த வியாழக்கிழமை (1) தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலகப்போர் ஆரம்பமாகிய 83 ஆவது நிகழ்வை முன்னிட்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதனை நாம் அறிக்கையாக முன்வைக்கவில்லை, ஜேர்மன் அரசு எமது கோரிக்கையை ஏற்காதுவிட்டால் நாம் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம். வெற்றியீட்டும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம். ஜேர்மன் அரசு பணத்தை வழங்குவதற்கான நிதியை கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் போர் நிறைவடைந்த பின்னர் கிழக்கு பிராந்திய நாடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் வழங்க முடியாது எனவும் ஜோமனின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் போரின் போது போலந்தே முதலாவது பாதிக்கப்பட்ட நாடு எனவே இழப்பீடுகள் வேண்டும் என போலந்து தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

இதனிடையே இந்திய படையினர் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட அழிவுகளுக்கு இதுவரையில் ஈழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதனை வழங்குமாறு தமிழ் கட்சிகள் இந்தியாவை கோர வேண்டும் என தமிழ் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.