சிறுவர் தினத்தை முன்னிட்டு காணமலாக்கப்பட்ட உறவினர்களால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் எங்கே? அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்’ என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட காணாமல்போனவர்களின் உறவுகள், ‘சின்னஞ்சிறு பிள்ளைகள் செய்த பிழை என்ன?’, ‘சிறுவர்கள் மீண்டும் வருவார்களா?’, ‘குற்றவாளியை விசாரணை செய்து தண்டனை வழங்கு’, ‘நீதி தேவதையே கண் திறந்து பார்’, ‘பாடசாலை சென்ற பாலகர்கள் எங்கே?’, ‘சிறுவர்கள் மீண்டும் வருவார்களா?’ போன்ற வாசகங்களை கொண்ட பதாதைகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் ஒளிப்படங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொறுப்பு கூறு ஜ.நா.வே பொறுப்பு கூறு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், ‘இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் ’எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டனர்.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஊடாக ஜ.நா. சபைக்கு மகஜர் ஒன்றை கிறிஸ்தவ பாதிரியாரிடம் வழங்கிவைத்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து சென்றனர்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிறுவர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் மனிதநேய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.