கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

565 Views

இலங்கைக்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்க முன் வந்தமைக்கு இலங்கை அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.

மாலத்தீவு, பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், ஷெசல்ஸ் ஆப்கானிஸ்தான், மோரிஷஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.

மேலும் இந்தியாவில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் மேலும் பல நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பல கட்டமாக தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்றும் ஐ.நா. சபையில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தரப் பிரதிநிதி கே.நாகராஜ் நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்குகிறது. இந்த தடுப்பூசிகள் நாளை கொழும்பு வந்து சேரும் என்று இலங்கை பிரதமர் மகிந்த  ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசியை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக  இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இலங்கை அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக, இந்தியாவில் கடந்த 16  ம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply