தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் – சீனா கண்டனம்

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக சீனா குற்றம்சுமத்தியுள்ளது.

 தென்சீனக் கடல் பகுதி முழுவதையும்  சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கும், தைவான், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கியுள்ள சீன இராணுவம் அங்கு விமானப் படைத் தளத்தை அமைத்துள்ளது.

ஆளால் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமெரிக்கா, தென்சீனக் கடல் சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று வாதிட்டு வருகிறது. மேலும் அந்தக் கடல் பகுதியில் கடந்த 2015 முதல் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

 இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கப் போர்க் கப்பல்கள் சமீபத்தில் தென்சீனக் கடல் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளன. யூஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட் என்ற போர்க் கப்பல் கடந்த வாரம் இறுதியில் தென்சீனக் கடல் பகுதியில் ரோந்து சென்றது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் ரோந்து செல்வது வாடிக்கையாக இருந்தது. சீனாவும் இதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னரும், தென்சீனக் கடலில் அமெரிக்காவின்  நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாததினால் சீனா தனது கண்டங்களை மீண்டும் தெரிவித்துள்ளது.