கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில் பரவிய மர்ம நோய் -300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

368 Views

ஆந்திராவில் அடையாளம் காணப்படாத ஒரு வித  நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், குழந்தைகள், பெண்கள் உள்பட, 326 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்  என்று கூறப்படுகின்றது.

இன்றைய நிலவரப்படி, சுமார் 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த கண்டுபிடிக்கப்படாத நோயின் காரணத்தை அறிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் குழு ஒன்றும் இன்று ஏலூரு சென்று ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அடையாளம் காணப்படாத நோய் பரவியுள்ளமை மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

இது வரையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,77,203 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,573 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply