கேள்விக்குறியாகும் இருப்பு-  துரைசாமி நடராஜா

இலங்கையில் தனித்துவம் மிக்கவர்களாக பெருந்தோட்ட மக்கள் விளங்கும் நிலையில் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களின் வகிபாகம் அளப்பரியதாகும். இந்நிலையில் இம்மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் இம்மக்களின இருப்பு கேள்விக்குறியாவதுடன் அரசியல் மற்றும் சமூக ரீதியாக மேலும் பல பாதக விளைவுகளும் ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெருந்தோட்ட மக்கள் சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்து  200 வருடங்களாகியுள்ள நிலையில் இம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தியில் தொடர்ச்சியாகவே காத்திரமான வகிபாகத்தினை வழங்கி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.இவர்களின் வாழ்க்கை நிலைமைகள் வறட்சியாக உள்ளபோதும் இவர்களால் தேசம் செழுமை பெற்று வருகின்றது. இந்நிலையில் இம்மக்களின் அபிவிருத்தி கருதி அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை என்ற பலமான குற்றச்சாட்டு இருந்து வருவதும் தெரிந்ததேயாகும்.இம்மக்களின் அபிவிருத்தியை திட்டமிட்டு மழுங்கடிக்கும் செயற்பாடுகள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.இவர்களின் வீழ்ச்சி இனவாதிகளின் மகிழ்ச்சிக்கு அடித்தளமாகி இருக்கின்றது.இனவாதிகளின் மேலெழும்புகையால் இவர்கள் கடந்த காலத்திலும் சம காலத்திலும் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நாட்டில் இம்மக்களின தொகையை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட முயற்சிகள் பலவாகும். இம்முயற்சிகளில் இனவாதிகள் வெற்றி கண்டுமுள்ளனர்.1911 இல் இலங்கையில் இந்திய வம்சாவளியினரின் தொகை  531,000 ஆகவிருந்தது.இது இங்கிருந்த மொத்த மக்கள் தொகையில் 12.9 வீதமாகும். இத்தொகையானது 1931 இல் 817,000 ஆகவும்,1953 இல் 974,000ஆகவும், 1963 இல் 1,123,000 ஆகவும்,1981 இல் 818,000 ஆகவும்,2012 இல் 839,504 ஆகவும் காணப்பட்டது.காலமாற்றத்துக்கேற்ப இம்மக்களின தொகையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமெனினும் பிழையான பதிவுகள் போன்ற பலவும் இவர்களின் தொகையில் வீழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இந்திய வம்சாவளியினரின்   வளர்ச்சி  குறைவடைந்து செல்லும் நிலையில் 1946 – 1953 க்கு  இடைப்பட்ட காலப்பகுதியில்  இவர்களின் வளர்ச்சி வீதம் 3.16 ஆகவிருந்தது. இத்தகைய  வளர்ச்சி வீத அதிகரிப்பிற்கு அக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து சற்று அதிகரித்த தொழிலாளர்களின் வருகையே காரணமாகுமென்றும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் விளைவாக பல இந்திய வம்சாவளி மக்கள் தாயகம் திரும்ப நேர்ந்தது.இதனடிப்படையில் 1971 ற்கும் 1984 ற்கும் இடையில் 446,338 பேர் தாயகம் திரும்பியிருந்தனர்.

இந்தியா திரும்பிய பெருந்தோட்ட இந்திய தொழிலாளர்களுக்கு முழுமையான புனர்வாழ்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.நம்பிக்கையுடன் தாயகம் திரும்பியோருக்கான புனர்வாழ்வுத் திட்டங்கள் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தன.இலங்கையில் வறுமையால் பீடிக்கப்பட்டவர்கள் இந்தியா திரும்பியதும் அநாதைகள் என்ற நிலைக்கே இட்டுச் செல்லப்பட்டனர்.இவர்களின் அநாதரவான நிலையை கடிதங்களின் மூலமாக அறிந்து கொண்ட இலங்கைவாழ் இந்தியர்கள் பலர் இந்தியா செல்ல தயக்கம் காட்டினர்.இந்திய குடியுரிமை பெற்று இந்தியா திரும்பியவர்கள் நீண்ட காலம் இலங்கையின் பன்மைக்கலாசார பாதிப்பிற்கு உட்பட்டிருந்ததால் அவர்கள் தமிழ் நாட்டுக் கிராமங்களில் ” நம்மவர்களாக” உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் நோக்கத்தக்கதாகும்.

மனிதர்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வேலைக்காகவோ அல்லது தங்களின் சொந்த காரணங்களுக்காகவோ இடம்பெயர்ந்து செல்வதானது புலம்பெயர்தல் எனப்படுகிறது.இதனைத் தவிர போர், மோதல்கள்,பாதுகாப்பின்மை, இயற்கைப் பேரிடர், காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களும் புலம்பெயர்தலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.அண்மைக்கால ஆய்வின்படி உலகளாவிய ரீதியில் சுமார் 24 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது உலக மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் அதிகமாகும்.உலகத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த மக்களையும் வைத்து ஒரு நாட்டை உருவாக்கினால் அந்த நாடு உலகின் ஐந்தாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக விளங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகையில் இந்திய வம்சாவளி மக்கள் ஏற்கனவே இங்கிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தமைக்கு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் முக்கிய காரணமாக அமைந்தன.இவைதவிர தொழில் நிமித்தமும் அண்மைக்காலத்தில் புலம்பெயர் நடவடிக்கைகள் இந்திய வம்சாவளியினரிடையே இடம்பெற்று வருகின்றன. இவைதவிர உள்ளூரில் இம்மக்களின இடம்பெயர்வுகள் இப்போது அதிகரித்து காணப்படுகின்றமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பிழையான பதிவுகள்

இந்திய வம்சாவளி மக்கள் இடம்பெயர்ந்து இலங்கையின் பல மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.இதேவேளை நுவரெலியா,கண்டி, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, கொழும்பு போன்ற மாவட்டங்கள் அதிகளவில்  இம்மக்கள் வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.. 2012 ம் ஆண்டு தகவலின்படி நுவரெலியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் தொகை 375,795  ஆகும் .பதுளை மாவட்டத்தில் 149,662  மாத்தளை 23,400, கண்டி 83,234 என்றவாறு இந்திய வம்சாவளியினரின் தொகை அமைந்திருந்தது.இம்மக்களின் இடப்பெயர்வில் பல்வேறு காரணங்கள் செல்வாக்கு செலுத்தி இருந்தன.இனக்கலவரங்கள், தொழிலின்மை, நகர்ப்புற மோகம், தேயிலைத் தொழிற்றுறையில் ஏற்பட்ட அதிருப்தி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட பல காரணிகளையும் நாம் இதன்போது சுட்டிக்காட்ட முடியும

1956 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் முதலாக 1971 ம் ஆண்டின் அரசாங்கம் நிலச்சீர்திருத்ததச் சட்டத்தினை நடைமுறைபடுத்தியபோது இடம்பெற்ற வன்முறைகள் மற்றும், 1977 ம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் போன்றவற்றின் விளைவாகவும் அதிகளவான இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் சார்ந்த மாவட்டங்களுக்கு குடிபெய்ந்தனர்.இத்தகையோர் இலங்கையின் பதிவு நடவடிக்கைகளின்போது தம்மை “இலங்கைத் தமிழர்” என்ற ரீதியிலேயே பதிவினை மேற்கொண்டனர். இதேவேளை  2018 காலப்பகுதியில்  அப்பகுதிகளில் இந்திய வம்சாவளியினரின் தொகை  சுமார் 175,000 ஆக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அத்தோடு இந்தியாவில் அகதிகளாக இருப்பவர்களில் கணிசமானோர் இந்திய வம்சாவளியினை சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறையில் தற்போது சவால்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை தெரிந்ததேயாகும்.இச்சவால்களுக்கு மத்தியில் ஊதிய வழங்கலும் திருப்திகரமானதாக இல்லை.கம்பனியினரின் உச்சகட்ட இலாபம் கருதிய செயற்பாடுகள் தொழிலாளர்களின் பல்வேறு நலன்களுக்கும் ஆப்பு வைத்து வருவதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன.இதனிடையே  சமகால பொருளாதார நெருக்கடிகள் தொழிலாளர்களை மோசமாக பாதித்துள்ள நிலையில் அவர்களின் இடப்பெயர்வு மற்றும் குடிப்பெயர்வு என்பன அதிகரித்து காணப்படுகின்றது.இதனிடேையே தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு வலுசேர்க்க  வேண்டும் என்பதனை  ஏற்றுக் கொண்டுள்ள முதலாளிமார் சம்மேளனம் உற்பத்தி சார்ந்த தொழிற்றுறையின் முக்கியத்துவம் தொடர்பிலும் தமது நிலைப்பாட்டை அண்மையில்  தெளிவுபடுத்தி இருந்தது.

இந்திய வம்சாவளியினரின் இடப்பெயர்வு பல்வேறு பாதக விளைவுகளுக்கும் வலுசேர்த்திருக்கின்றது.ஒரு சமூகத்தின் மக்கள் கூட்டம் செறிவாக வாழும்போது அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமாகும் என்பதோடு பலமும் அதிகமாகும்.அழுத்தங்களைப் பிரயோகித்து தமக்கு தேவையான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதிலும் இதனால் முன்னேற்றம் ஏற்படும்.எனினும் இம்மக்களின செறிவு சிதறடிக்கப்பட்டு இவர்கள் ஆங்காங்கே சிதறி வாழும் போது அது பாதக விளைவுகளுக்கு வலுசேர்க்கின்றது.இடப்பெயர்வினாலும் இத்தகைய விளைவுகள் மேலெழுகின்றன.இனவாத ஆட்சியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் இம்மக்களின செறிவை சிதறடிக்கும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.காலத்துக்கு காலம்‌ கட்டவிழ்த்து விடப்படும் வன்செயல்கள் இதில் ஒரு அங்கமேயாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இடப்பெயர்வு நடவடிக்கைகள் இம்மக்களின இருப்பு மற்றும் அடையாளம் என்பவற்றை கேள்விக்குறியாக்குவதோடு கலாசார ரீதியான பாதிப்புக்களுக்கும் வித்திடுகின்றன.

ஒரு சமூகம் உரிமைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்வதற்கு அச்சமூகம்சார் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் இன்றியமையாததாகும்.அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவம் பின்தங்கிய பல சமூகங்களின் எழுச்சிக்கு தோள் கொடுத்திருக்கின்றது.இந்த வகையில் இந்திய வம்சாவளியினரின் இடப்பெயர்வின் காரணமாக அரசியல் பிரதிநிதித்துவம் பாதிப்படையும் அபாயமுள்ளது.1964 இல் முன்வைக்கப்பட்ட  ‌‌ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் இந்திய வம்சாவளியினரை இந்நாட்டில் பலவீனப்படுத்திவிட்டது. இவ்வொப்பந்தம்  நடைபெற்று இம்மக்கள் நாடுகடத்தப்பட்டு இருக்காவிட்டால் பாராளுமன்றத்தில் இன்று சுமார் 25 இச்சமூகம் சார் உறுப்பினர்கள் இருந்திருக்கலாம்.வடக்கு கிழக்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குறைந்தது 50 பேராவது பாராளுமன்றத்தில் இருக்கும் வாய்ப்பை ஒப்பந்தம் சீர்குலைத்து விட்டது.என்ற கருத்து வெளிப்பாடுகளும் ஓங்கி ஒலிக்கின்றன.இதில் உண்மை இல்லாமலும் இல்லை.எனவே இடப்பெயர்வு மற்றும் சமூக ரீதியில் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.இடப்பெயர்வின் தாக்க விளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவும் வேண்டும்.

Leave a Reply