காஷ்மீர் மக்களுக்கு நீதி கேட்டு கொழும்பில் போராட்டம்

245 Views

காஷ்மீர் மக்களுக்கு நீதி கேட்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான காரியாலயம் முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

1991ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம்’ பிப்ரவரி 5 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே ‘காஷ்மீர் ஒற்றுமை நாளை முன்னிட்டு பிரபல சமூக செயற்பாட்டாளரும், காஷ்மீருக்கான குரல்கள் அமைப்பின் தலைவருமான மிப்ளால் மௌலவியின் தலைமையில் அடையாளப் போராட்டம் ஒன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.

காஷ்மீரில் வாழும் மக்களுக்கும் உணர்வுகளும் உரிமைகளும் உண்டு. அங்கு துயரில் வாடும் மக்களுக்கு சர்வதேச அமைப்புக்கள் தலையிட்டு நீதி பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகளுடனும் சுலோகங்களுடனும் இலங்கை தேசியக் கொடியை ஏந்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

அதே நேரம் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திலும் இது தொடர்பிலான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற  ‘காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “காஷ்மீர் விவகாரத்தில்  ஐநா நிறைவேற்றிய தீர்மானத்தின் படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம்” என்றார்.

கடந்த 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply