காரைதீவு பிரதேச சபையின் தீர்மானம் வடக்கு கிழக்கு எங்கும் எதிரொலிக்குமா?

சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் அரச தலைவர் செயலணிக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சிங்களவர்களையும், ஐக்கிய நாடுகள் சபையினால் இனங்காணப்பட்ட போர்க்குற்றவாளிகளையும் கொண்ட இந்த குழுவின் செயற்பாடுகள் என்னவாக இருக்கும் என தமிழ் மக்கள் நன்கு அறிந்ததே.

கிழக்கில் உள்ள தமிழ் இனத்தின் தொன்மங்களை அழிப்பது அல்லது அந்த இடங்களை சிங்கள இனம்சார் வரலாறாக மாற்றுவது. அதன் மூலம் அங்கு ஏற்படுத்தப்படும் சிங்களக் குடியேற்றங்களுக்கு புதிதாக சிங்கள வரலாறு ஒன்றை எழுதுவது தான் இந்த குழுவின் நோக்கம். அதன் விளைவு என்பது தமிழ் இனம் தனது வரலாற்றை தொலைத்து நிலங்களையும் இழப்பதுடன் தாயகம் என்ற எமது கொள்கைகளும் அழிந்து போய்விடும்.

எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ் இனம் தயாகத்திலும், புலத்திலும் தனது எதிர்வினையை ஆற்றவேண்டும்.

அதற்கு முன்மாதிரியாகவே சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவு பிரதேச சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

காரைதீவு பிரேதச சபையின் 28 ஆவது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கடந்த வியாழக்கிழமை(11) கூடியபோதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச தலைவர் செயலணி குழுவின் நடவடிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தமிழர் தாயகப் பிரதேசங்களின் இடங்கள் அவை திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கையாகும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிபோகும் நிலையில் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் தான் அதிக இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழ் சமூகத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலாகும் என சபை உறுப்பினர் ஏ.ஆர் மொகமட் பஸ்மீர் இந்த பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் முஸ்லிம் பிரதிநிதிகளையும் கொண்டுள்ள இந்த சபை சிறீலங்கா அரசின் பௌத்த மயமாக்கலுக்கு எதிராக தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியிருப்பது மிகவும் வரவேற்றகத்தக்கது.இதையடுத்து போரதீவுப்பற்று பிரதேச சபையிலும் இத்தகையதொரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவற்றைப் பின்பற்றி வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய சபைகளும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுடன்இ வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு எதிராக நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவேண்டும்.புலம்பெயர் தமிழ் சமூகமும், தமிழ் இனத்தின் இருப்பையும், தாயகக் கோட்பாட்டையும் காப்பாற்ற முன்வரவேண்டும்.