ஹாமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை (07) இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக காசாவின் மக்கள் குடியிருப்புக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்களினால் இதுவரையில் தமது பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பை சேர்ந்த பணியாளர்களே கொல்லப்பட்டுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையேஇ ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக இஸ்ரேல் பலஸ்தீனமக்களை கூட்டாக தண்டிப்பதாக ஐ.நாவின் சுயாதீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 16 வருடங்களாக அந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அங்கு 5 இற்கு மேற்பட்ட கொடூரமான போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்களில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது நீர், மின்சாரம் மற்றும் உணவு போன்றவற்றை தடைசெய்து அவர்கள் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுவருகின்றது. இது மிகவும் கண்டனத்துக்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கடந்த வியாழக்கிழமை (12) இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் அந்தோனி பிளிங்டன் இஸ்ரேலுடன் அமெரிக்கா எப்போதும் நிற்கும் எனவும், மேலதிக நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.