கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப் படவேண்டும் என்று கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

354 Views

 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று கோரும் பிரேரணை காரைதீவு பிரதேச சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 07 வாக்குகளும், எதிராக 04 வாக்குகளும், நடுநிலையாக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. அதன்படி 03 மேலதிக வாக்குகளால் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேசசபை அமர்வு இன்று (15) திங்கட்கிழமை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.
அதன்போது த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி கே. ஜெயராணி குறித்த பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

அதனை சபையில் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் த. மோகனதாஸ் முன்மொழிய ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர் மு.காண்டீபன் வழிமொழிந்தார்.

பின்னர் சபையில் கருத்துகளுக்கு பிரேரணை விடப்பட்டது. சகல உறுப்பினர்களும் கருத்துக்களைக் கூறினார்கள்.

தவிசாளர் உள்ளிட்ட 07 தமிழ் உறுப்பினர்களையும் 05 முஸ்லிம் உறுப்பினர்களையும் கொண்ட காரைதீவு பிரதேச சபையில் இப்பிரேரணை விரிவாக பலராலும் ஆராயப்பட்டு அவரவர் சமுகம் சார்ந்து நியாயங்களை முன்வைத்து கருத்துரைக்கப்பட்டது.

இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தவிசாளர் கி. ஜெயசிறில் திருமதி கே. ஜெயராணித.மோகனதாஸ், ச.நேசராசா, மு.காண்டீபன், இ.மோகன், ஆ. பூபாலரெத்தினம், ஆகிய 07 பேரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக உபதவிசாளர் எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம். இஸ்மாயில், ஏ. ஜலீல், எம். றனீஸ் ஆகியோர் வாக்களித்தனர்.

மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் எ. பஸ்மீர் நடுநிலை வகித்தார்.

Leave a Reply