ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – திருமுருகன் காந்தி

565 Views

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்தியா கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் அழுத்தம் என்பது இந்திய மத்திய அரசின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்களும் உண்டு.

எனவே இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகம் தமிழகத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளிடம் எமது கேள்விகளை முன்வைத்திருந்தோம். அதற்கு கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அளித்த பதில்களை இங்கு தருகின்றோம்.

சில சந்தர்ப்பங்களில் கேள்விக்கான பதில்கள் தொடர்புடையதாக இருக்காது, எனினும் அரசியல் பிரமுகர்களின் உண்மையான கருத்துக்களை பிரதிபலிப்பதாற்காக நாம் அதில் திருத்தம் செய்யாது அப்படியே வாசகர்களுக்கு தருகின்றோம். அடுத்த இதழிலும் நேர்காணல் தொடரும்.

மே – 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி அவர்களின் நேர்காணல்

கேள்வி:  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட  மிகவும் காத்திரமான அறிக்கை தொடர்பில் உங்கள் கட்சி என்ன  கருத்தை கொண்டுள்ளது.

பதில்: ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட அறிக்கை காத்திரமான அறிக்கை என்று நாங்கள் கருதவில்லை.  இந்த அறிக்கையானது மிகத் தெளிவாக சிறீலங்கா அரசின் மீதான குற்றத்தை வரையறுத்திருக்க வேண்டும். அப்படியான முழு வரையறை என்பது அந்த அறிக்கையில் முன்வைக்கப்படவில்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தான ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். தேவைப்படின், சர்வதேச நீதிமன்ற வழிமுறைகளுக்கு சிறீலங்காவை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் முன்மொழிகிறார்கள். முன்பிருந்ததைவிட ஒரு படி மேலாக இதில் சர்வதேச அரங்கம் குறித்து அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் கடந்த 2015இலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலே மிக முக்கியமாக முன்மொழியப்பட்டது, சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறை அல்லது விசாரணை முறை என்பது முற்றிலுமாகத் தோல்வியடைந்திருப்பதனுடைய காரண காரியங்களை இந்த அறிக்கையிலே தெளிவாக சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அந்த உள்நாட்டு விசாரணை முறைகள் அல்லது உள்நாட்டு நீதி பரிபாலன முறைகள்  ஏன் தோல்வியடைந்தது. அதன் காரணம் என்ன என்பதை அரசின் கொள்கையாக இருக்கக்கூடிய பேரினவாதத்தைக் குறித்தான விளக்கங்கள்  மிகத் தெளிவாக சர்வதேச மட்டத்திலே முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது நடந்ததை ஒரு இனப்படுகொலையாகத் தான் தமிழினம் வரையறுக்கிறது என்று தமிழினத்தின் கோரிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக சர்வதேச அளவில் இருக்கக்கூடிய இனப்படுகொலை குறித்து வழக்காடியவர்கள், அதற்கான நீதிக்காக போராடியவர்கள், ஐ.நாவில் பங்கு வகித்த பொறுப்பாளர்கள் என அனைவருமே இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்று திட்டவட்டமாக, தீர்மானகரமாக சொல்லியிருக்கிறார்கள். இது குறித்து இந்த அறிக்கையில் எந்தவிதமான குறிப்புகளும் இல்லை. இனப்படுகொலை குறித்தான அக்கறையும், ஒரு கவலையுமோ அல்லது அது குறித்தான பார்வையுமோ இந்த அறிக்கையில் இல்லை.  அது நம்முடைய கோரிக்கையில் தெளிவானது. இனப்படுகொலை என்று வரும் பொழுது தான் தமிழினம் குறித்தான கேள்விகளும், தங்கள் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான தேவையையும் சர்வதேசம் புரிந்து கொண்டு அங்கீகரிக்கும்.

சுயநிர்ணய உரிமை குறித்தான கேள்விகள் எழுப்பப்படுவதற்கான அறிகுறிகள் அல்லது அது குறித்தான வரையறைகளை இந்த அறிக்கையில் என்னால் பார்க்க முடியவில்லை. இதை வைத்துக் கொண்டு இலங்கை அரசை என்ன செய்யப் போகின்றார்கள் என்பது குறித்து தான் எங்களுக்கு பல்வேறு ஐயங்கள் எழுகின்றன.

குறிப்பாக ஐ.நாவில் கொண்டு வரப்படுகின்ற அல்லது காத்திரமான என்று சொல்லி விளம்பரப்படுத்தப்படுகின்ற தீர்மானங்கள் எப்பொழுதும் சிறீலங்கா அரசிற்குள் அல்லது இலங்கைக்குள் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான கருவியாகத் தான் பயன்பட்டிருக்கின்றன. இப்பொழுதும் அப்படியாகத் தான் இது முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே தமிழர்கள் விழிப்புடன், இந்தக் காத்திரமான நிலைப்பாட்டில் ஏதோ சர்வதேச நாடுகள் எல்லாம் நமக்கு சாதகமாக வந்து விட்டன என்கின்ற நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கின்றது.

கேள்வி: சிறீலங்கா அரசு நீதியை நிலைநாட்ட தவறுவதுடன், தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டும் வருகின்றது. இந்த நிலையில் சிறீலங்கா மீது கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டியது குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.

பதில்: சிறீலங்கா மீது கொண்டுவரப்படக்கூடிய தீர்மானம் என்ன காரணத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச அரங்கிலே இந்த தெற்காசிய பிராந்தியம் என்பது மிக முக்கியமான பகுதியாக மாறியிருக்கிறது. குறிப்பாக சீனாவை சுற்றியிருக்கிற கடற்பகுதியில் இரண்டு கடற்பகுதிகளைப் பார்க்கலாம். ஒன்று தென்சீனக் கடல் மற்றயது தெற்காசியக் கடல். தென்சீனக் கடலில் இருக்கின்ற நெருக்கடியைப் போன்று தெற்காசியாவில் இருக்கக்கூடிய தங்களுடைய நலன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக மேற்குலகம் குறிப்பாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இதேவேளை தன்னை நிலைநாட்டுவதற்காக சீனாவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆகவே இந்த இரண்டு அணிகளிற்கிடையிலான போட்டியின் விளைவாகத்தான் பல்வேறு நகர்வுகள் சர்வதேச மட்டத்தில் ஏற்படுகின்றன. அந்த வகையில் தான் இன்றைக்கு சிறீலங்காவில் கொண்டுவரப்படக் கூடிய தீர்மானங்கள் எல்லாம் இலங்கைக்குள்ளாக மேற்குலகத்திற்கு சாதகமான ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் முன்மொழியப்படுகிறது என்று மே 17 இயக்கம் உறுதியாக நம்புகிறது.  குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கடற் பிராந்தியத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா, யப்பான் நாடுகளோடு அமெரிக்காவும் இணைந்து குவாட் என்று சொல்லப்படுகின்ற ஒரு கூட்டமைப்பை, கூட்டு கடற்பயிற்சியை செய்து வருவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

இந்தக் கூட்டுப் பயிற்சிக்கு மிக முக்கியமான தளமாக விளங்குவது இலங்கையாக இருக்கிறது. இலங்கையில் சீனாவிற்கும் இடம் இருக்கிறது. அதனுடைய கப்பல் வந்து செல்வதற்கான வழிமுறைகள் இருக்கின்ற. சீனாவும் அங்கே ஒரு துறைமுகத்தை சொந்தம் கொண்டாடி வருகின்றது.

இந்த சமயத்தில் தான் கிழக்கு கொள்வனவு முனையம் என்று சொல்லப்படுகின்ற கொழும்புத் துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் ஒரு பகுதியை ஒரு துறைமுகத்தை தன்னுடைய நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்தியா முடிவு செய்தது. இதற்கு உதவியாக யப்பானின் நிதியுதவியும் முன்மொழியப்பட்டது. இந்த இரண்டு நாடுகளினுடைய தேவைக்கேற்ப குறிப்பாக இந்தியாவினுடைய  பெரு வணிகர் அதானி நிறுவனத்திற்கு  ஏற்ப அவர்களுக்கு சாதகமாக இந்த துறைமுகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற அந்த முயற்சியில் கோத்தபாய அரசு அதை முற்றிலுமாக மறுத்து, நிராகரித்து சிறீலங்கா அரசே அதை ஏற்று நடத்தும் என்று முன்மொழிந்ததே இந்தியாவிற்கும், இலங்கைக்கும்  இடையிலான முரண்பாடுகளை வளர்த்திருக்கிறது. யப்பானும் இதற்கான வன்மையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் இலங்கை சீனாவின் பக்கம் சரிகின்றது என்ற ஒரு ஐயம் சர்வதேச மட்டத்தில் எழுந்திருக்கிறது. சீனாவின் பக்கம் செல்கின்ற இலங்கை அரசை தன் கட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று இந்த நான்கு நாடுகளும் முயன்று கொண்டிருக்கின்றன. ஆகவே இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக, – இந்த தீர்மானத்தின் பின்புலத்தில் – இந்த நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுடைய பிராந்திய நலன் – சுயநலன் – என்பது அமைந்திருக்கிறதெ தவிர தமிழனுக்குத் தீர்வு தரவேண்டும் என்கின்ற எந்த நோக்கமும் இந்தத் தீர்மானத்தில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்தப் பிராந்தியத்தில் ஒரு பகுதியில் பர்மாவிலே நடக்கின்ற ஆட்சி மாற்றம் அல்லது அங்கே நடைபெற்ற இராணுவ ஆட்சி, மறுபுறத்தில் இலங்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய இராணுவமயமாக்கல் அல்லது கோத்தபாய ராஜபக்ஸவினுடைய இராணுவ ரீதியிலான அணுகுமுறை மற்றும் சீனாவுடன் அவர் காட்டுகின்ற நெருக்கம். இவற்றை முன்வைத்துத் தான் இந்த நகர்வுகள் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வாய்ப்பை தமிழர்கள் மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பாக இந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் என்று சொல்லப்படுகின்ற தமிழர்களின் எழுச்சிப் பேரணியென்பது சர்வதேச மட்டத்தில்  தமிழர்கள் பக்கம் தலையை திருப்பிப் பார்க்க வைத்துள்ளது.

தமிழர்களை நீங்கள் உதாசீனப்படுத்திவிட முடியாதென்று தமிழர்கள் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக மத எல்லையைக் கடந்து தமிழர்கள் சைவ மதத்தவரும், இஸ்லாமிய மதத்தவரும், கிறிஸ்தவ மதத்தவரும் ஒன்றுபட்டு நிற்பதை உலகம் பார்த்திருக்கிறது.

ஆகவே தமிழர்களை உதாசீனப்படுத்தி, தீர்வைத் திணித்துவிட முடியாது. தமிழர்களை ஏமாற்றி, தங்களுக்கு சாதகமான தீர்வுகளை கொண்டுவந்துவிட முடியாது என்பதை தமிழர்கள் உணர்ந்திட வேண்டும். அந்த வகையில் இந்தத் தீர்மானங்களுக்கு எல்லாம் ஏமாந்து விடாமல், தீர்மானங்களுடைய வலைப் பின்னல்களுக்குள் சிக்கி விடாமல் தமிழர்கள் தங்கள் இனப்படுகொலைக்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைக்க வேண்டும்.

அந்த இனப்படுகொலைக்கான நீதியும் குறிப்பாக இந்த தமிழின விடுதலைக்கான பொது வாக்கெடுப்புக் குறித்தான கோரிக்கையையும், முழக்கத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று மே 17 இயக்கம் விரும்புகிறது. அதைத் தான் தீர்வாக இந்த சமயத்தில் நாங்கள் முன்வைக்கின்றோம்.

கேள்வி: சிறீலங்கா தமிழர்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்  என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் தமிழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்தியா இதுவரை என்ன முயற்சிகளை எடுத்துள்ளது.

பதில்: கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா தமிழர்களுக்கு எந்த நல்லவித முயற்சிகளையும் எடுத்துவிடவில்லை. இப்போதுகூட இந்தியப் பிரதமர் சொல்லியிருக்கக்கூடிய அந்த அறிவிப்பானது இலங்கைக்குள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியா எடுத்த முயற்சியைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருப்பாரே தவிர தமிழர் நலன் சார்ந்ததாக நடவடிக்கை எடுப்பதாக அவர் சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. அப்படியாக தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்திய அரசு அதன் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதை அது வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதன் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இந்தியா நமக்கு ஆதரவளிக்கிறது, துணை செய்கிறது என்றெல்லாம் பரப்பப்படுகின்ற செய்திகளை நம்பி தமிழர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். ஏனென்றால், தமிழ்நாட்டிற்குள்ளாகவே பாஜகவின் மோடி அரசு தமிழினத் துரோகமாக செய்கின்ற பல்வேறு நடவடிக்கைகளைப் பார்த்து வருகிறது.

தமிழினத்தின் இந்த நெருக்கடியானது, தமிழ்நாட்டிற்குள் நடக்கக்கூடிய இந்த சூழ்நிலையைப் புரிந்து, அந்த அடிப்படையில் தான் அவர்களும் அந்த நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிற்குள்ளாகவே ஒரு நிலையான தமிழர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்காத, அல்லது தமிழர் நலனை கொண்டுவர விரும்பாத  பாஜக அரசு, எப்படி தமிழீழ மக்களுக்குக் கொண்டுவரும் என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகின்றோம்.

ஆகவே இப்படியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மோடி அரசு செயற்படுகிறது. அதற்கு உறுதுணையாக நிற்கும் என்று சொல்லுவதெல்லாம், தமிழர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம். முப்பது ஆண்டாக சிறீலங்கா அரசு செய்துவரும் இனப்படுகொலையை இந்தியா தடுத்து நிறுத்தியதாக ஒரு வரலாறே இல்லை. அப்படியிருக்கக்கூடிய பட்சத்தில் இதற்கு மேலும் வாய்ச் சொல்லை நம்பி தமிழர்கள் ஏமாந்துவிட கூடாது என்றும் எங்களது கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம்.

கேள்வி: தமிழ் மக்கள் மீது இந்தியா அக்கறை கொண்டுள்ளதானால் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா?

பதில்: இந்தியா இந்த தீர்மானத்தின் பின்னால் நின்று நகர்த்துகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிப்பதல்ல. மேற்குலகம் தனது நலன் சார்ந்து கொண்டுவரும் இந்த தீர்மானத்தை நிச்சயமாக நிறைவேற்றி விடும். இந்திய அரசு வழக்கம் போல தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதைப் போன்ற ஒரு கள்ள முகத்தைக் காட்டி கடந்துவிட விரும்புவார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இனப்படுகொலையைக் குறித்தோ, தமிழீழம் குறித்தோ அல்லது இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை குறித்தோ எந்தவிதமான கருத்தும் சொல்லாத இந்திய அரசு, இதை ஆதரித்துவிடும் என்று எதிர்பார்த்துவிட முடியாது.

ஆகவே இப்படியான ஒரு சூழல், குறிப்பாக தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து கொண்டிருக்கக் கூடிய சூழலில் இது போன்ற நாடகங்களை இந்திய அரசு நடத்தும் என்பதை நாம் புரிந்துகொள்வது நல்லது.

கேள்வி: அதனை ஆதரிக்க வேண்டியது உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடு எனக் கூறும் இந்தியாவின் கடமை அல்லவா?

பதில்: உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருந்தது என்ற காலம் என்பது வேறு. இப்போது இந்தியாவின் நிலை என்பது வேறு. உலக அளவில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கின்றது என்பதை பல்வேறு சமீபத்திய நிகழ்வுகள் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற ஜனநாயக உரிமைகள் மலிந்து கிடக்கின்ற இந்தியா, ஒரு ஜனநாயக நடவடிக்கையின் தீர்மானத்தை சர்வதேச மட்டத்தில் முன்வைக்கும் என்பதை நாம் எந்த வகையில் நம்புவது என்று தெரியவில்லை.

ஆகவே தமிழர்கள் தான் இதற்கான ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய தமிழர்கள். இந்தப் பிரச்சினை குறித்து தங்கள் நாடுகள் மீதான ஒரு கடுமையான அழுத்தத்தைக் குறித்து நமது விடுதலைக்கான ஒரு பணியினை மேற்கொள்ளக்கூடிய வகையிலே அந்தந்த நாடுகளில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையும். இது இரண்டையும் கொண்டுவர வேண்டும். இவற்றை தமது நாடுகளில் கொண்டுவரும் போது நமக்கான சாதகமான சூழ்நிலையை கொண்டுவர முடியும் என நம்புகின்றோம்.

 

Leave a Reply