ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – வைகைச் செல்வன்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்தியா கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் அழுத்தம் என்பது இந்திய மத்திய அரசின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்களும் உண்டு.

எனவே இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகம் தமிழகத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளிடம் எமது கேள்விகளை முன்வைத்திருந்தோம். அதற்கு கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அளித்த பதில்களை இங்கு தருகின்றோம்.

சில சந்தர்ப்பங்களில் கேள்விக்கான பதில்கள் தொடர்புடையதாக இருக்காது, எனினும் அரசியல் பிரமுகர்களின் உண்மையான கருத்துக்களை பிரதிபலிப்பதாற்காக நாம் அதில் திருத்தம் செய்யாது அப்படியே வாசகர்களுக்கு தருகின்றோம். அடுத்த இதழிலும் நேர்காணல் தொடரும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் அளித்துள்ள பதில்கள்

கேள்வி – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட  மிகவும் காத்திரமான அறிக்கை தொடர்பில் உங்கள் கட்சி என்ன  கருத்தை கொண்டுள்ளது?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர்களின் ஆதரவு நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியோடு இருக்கிறது.

கேள்வி – சிறீலங்கா அரசு நீதியை நிலைநாட்ட தவறுவதுடன் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டும் வருகின்றது. இந்த நிலையில் சிறீலங்கா மீது கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டியது குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

சிறீலங்கா அரசு நீதியை நிலைநாட்டத் தவறியதை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த கால ராஜபக்ச அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து இலங்கை அரசு ஈடுபட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்கும். இந்திய அரசை வலியுறுத்தி மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும்.

கேள்வி – ஈழத் தமிழர்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்  என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் தமிழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்தியா இதுவரை என்ன முயற்சிகளை எடுத்துள்ளது?

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக உணவு, மருந்து போன்ற பொருள்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. இன்னும் அவர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது.

கேள்வி – தமிழ் மக்கள் மீது இந்தியா அக்கறை கொண்டுள்ளதானால் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா?

தமிழ் மக்கள் மீது இந்தியா எப்போதுமே மனிதநேயத்தோடு செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை கலந்தாலோசித்து உரியமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதப்பிரதமரை தமிழக அரசு வலியுறுத்தும்.

கேள்வி – அதனை ஆதரிக்க வேண்டியது உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடு எனக் கூறும் இந்தியாவின் கடமை அல்லவா?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தனது கடமையை மானுடப்பற்றோடு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.