ஐ.நா அறிக்கை! கடும் சீற்றமடைந்த விக்னேஸ்வரன்

347 Views

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனும் போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நிறைவுபெற்றுள்ளதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுயாதீன சர்வதேச விசாரணைகளுக்கான முதல்படியே தமது அறிக்கைகள் என ஐக்கிய நாடுகள் சபையே அறிவித்துள்ள நிலையில் சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டதாக சுமந்திரன் கூறி வருவதாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு பாரப்படுத்தப்பட்டு சர்வதேச விசாரணையொன்றுக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், ஏற்கனவே சர்வதேச விசாரணை நிறைவுபெற்றுவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறிவருகின்றார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றைக் கோராமலும் அல்லது ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும் சுமந்திரன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

சுமந்திரனின் இந்த செயல் தவறானது எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், ஸ்ரீலங்கா அரசினாலும் அரச படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவின் இந்த அறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதே உண்மை எனவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ ஸ்ரீலங்கா ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிக்கப்பாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுமந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களை தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதற்கான முயற்சிகளே என்று கருத வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும் நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன எனவும் அம் முயற்சி முடிவடையவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் பதியப்படவில்லை என்பதுடன் தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே தமது அறிக்கைகள் என அதனை தயாரித்தவர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply