உளவு பார்க்க புறாக்களை பயன்படுத்தியது எப்படி அமெரிக்க CIA வெளியிட்ட தகவல்கள்

பனிப்போர் காலத்தில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்களின் பயணம் குறித்த இரகசிய தகவல்களை முதன்முறையாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான CIA வெளியிட்டுள்ளது.

சோவியத் ரஷ்யாவின் முக்கியமான இடங்களை புகைப்படம் எடுக்கும் இரகசியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட புறாக்களுக்கு எப்படி பயிற்சியளிக்கப்பட்டன என்ற தகவல்களை வெளியிட்டுள்ளது.

இவற்றுடன் சோவியத் ரஷ்யாவின் திட்டங்களை ஒட்டுக் கேட்கும் பணியில், சிறிய சாதனங்களை வீசும் பணியில் காக்கைகளும், ஆழ்கடல் பயணங்களில் டொல்பின்களும் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தங்களது இரகசிய திட்டங்களை செயற்படுத்துவதற்கு பறவைகள் மற்றும் விலங்குகள் மிகவும் பொருத்தமானவை என்று CIA கருதுகின்றது.

அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்திலுள்ள CIAயின் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதியில்லை. இருப்பினும் ஊடகவியலாளர் ஒருவர் ஒரு நேர்காணல் ஒன்றிற்காக அங்கு சென்றிருந்த போது, பல்வேறு விதமான உளவு கருவிகளைவிட ஒரேயொரு விடயம் தான் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது என்னவெனில் கமரா பொருத்தப்பட்ட புறா.

pigeon 2 உளவு பார்க்க புறாக்களை பயன்படுத்தியது எப்படி அமெரிக்க CIA வெளியிட்ட தகவல்கள்இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ்காரர் உளவு புறாக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக அவர் அறிந்திருந்த போதும் இதை பார்த்ததும் வியப்படைந்தார். இருப்பினும் தங்களின் உளவுப் புறாக்களின் பயண விபரங்களை CIA இன்னமும் வெளியிடவில்லை என அப்போது கூறப்பட்டது. ஆனால் தற்போது அது குறித்த அனைத்து விடயங்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.

1970களில் டக்கானா என்னும் குறியீட்டுப் பெயரைக் கொண்ட திட்டத்தின் கீழ், புறாக்களின் உடலில் சிறியளவிலான கமராக்களை பொருத்தி, அதன் மூலம் தானியங்கியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக CIA யின் புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் கடந்து வந்தாலும் தான் எங்கிருந்து பயணத்தை தொடங்கினோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் படைத்த புறாக்களைக் கொண்டு இந்த அசாத்தியமான முயற்சிகள் CIAயால் முன்னெடுக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் தொடர்பாடலில் புறாக்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், முதலாம் உலகப் போரின் போது தான் முதல் முறையாக புறாக்கள் உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

அதற்கும் முன்னதாக, 1960களில் காகங்களைப் பயன்படுத்தி அதிகபட்சம் 40 கிராம் எடை கொண்ட பொருட்களை எளிதில் செல்ல முடியாத இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது மட்டுமன்றி, எடுத்து வருவது குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.

அதாவது, பறவைகள் செல்ல வேண்டிய இலக்குகளை சிவப்பு லேசர் ஒளியைப் பாய்ச்சி குறிப்பதுடன், அவை திரும்ப வருவதற்கு தனியே மற்றொரு ஒளி அடிப்படையிலான முறை பயன்படுத்தப்பட்டது. மேலும், பயணம் செய்து கொண்டே இருக்கும் பறவைகளைக் கொண்டு சோவியத் ரஷ்யாவின் இரசாயன ஆயுதங்கள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்கும் CIA முயற்சித்தது.

நாய்களின் மூளையைத் தூண்டும் வகையில் மின்சாரத்தை பயன்படுத்தியும், பூனைகளின் உடலுக்குள்ளே ஒட்டுக் கேட்பு கருவிகளைப் பொருத்தியும் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த மேலதிக தகவல்களை CIA வெளியிடவில்லை.

குறிப்பாக டொல்பின்களை பலவகையான உளவு வேலைகளில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. உதாரணமாக, எதிரி கப்பல்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னதாக, அவர்களின் கைவசம் உள்ள நீர்மூழ்கி கப்பலின் அமைப்பு, அதிலுள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அறிவதற்காக டொல்பின்களின் உடலில் உணரிகள் (சென்சர்) பொருத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன.

மேலும் கப்பல்களில் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணியிலும், பெற்று வரும் பணியிலும் டொல்பின்கள் ஈடுபடுத்தப்பட்டன.

1967 ஆம் ஆண்டளவில் உளவுப் பணியில் டொல்பின்களை ஈடுபடுத்தும் ஆக்ஸிகாஸ் திட்டம், பறவைகளுக்கான ஆக்ஸியோலைட் திட்டம் மற்றும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான கெச்செல் ஆகிய திட்டங்களுக்கு CIA ஆறு இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவு செய்துள்ளது.

1970களின் மத்தியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளின் வாயிலாக கமராக்கள் பொருத்தப்பட்ட பறவைகள் உளவு பார்ப்பதற்காக திறன் வாய்ந்த தெரிவு என உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக, புறாக்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அக்காலத்தில் உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எடுத்த படங்களைவிட தெளிவாக இருந்ததை வல்லுநர்கள் உறுதி செய்தனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் பலகட்ட சோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகள் மட்டுமே. உண்மையிலேயே இவற்றைப் பயன்படுத்தி எத்தனை திட்டங்கள் செயற்படுத்தப்பட்டது? என்பது குறித்து CIA இன்னும் இரகசியமாகவே வைத்திருக்கின்றது.

 

Leave a Reply