ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்கலாம் – ஈரான் ஜெனரல்

ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை எனவே அது உலகத்தின் எரிபொருள் வழங்கல்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தலாம் என ஈரானின் மூத்த படைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமது பிராந்தியத்தில் அமெரிக்காவே பதற்றத்தை தோற்றுவித்து வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை (17) ஈரான் தெரிவித்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இது ஒரு மோதலுக்கு வழிவகுக்கலாம் என மேற்குலக புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர். போர் ஏற்பட்டால் அது உலகின் எரிபொருள் வினியோகத்தை பாதிக்கும் என ஈரானின் இராணுவ ஜெனரல் சாலேஷ் ஜேகர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதுடன், அணு ஒப்பந்தத்தில் இருந்து தன்னிட்சையாக விலகியதும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் போரின் விழிம்பில் உள்ளன என ஈரானின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குசேன் சலாமி கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். இஸ்லாமியப் புரட்சியில் இது ஒரு முக்கியமான தருணம் ஏனெனில் எதிரி தனது முழு பலத்துடன் மோதலுக்கு தயாராக வந்துள்ளான்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடை எமக்கு மிக அதிக பாதிப்புக்களை கொடுத்துள்ளது. பிராந்திய ஆதிக்கத்தில் இருந்து நாம் புறந்தள்ளப்படுகின்றோம். ஈரான் – ஈராக் போருக்கு பின்னர் நாம் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே .அண்மையில் ஈராக்குக்கு பயணம் மேற்கொண்ட ஈரான் படை அதிகாரி அங்குள்ள குழுக்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் நாளேடு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள தமது படையினரை எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானியயா தெரிவித்திருந்தது.

கடந்த வாரம் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணைத்தாங்கி கப்பல்கள் உட்பட நான்கு கப்பல்கள் ஐக்கிய  அரபு இராட்சிய கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்ததைத் தொடர்ந்து மேலும் பதற்றங்கள் அதிகரித்திருந்தது.

இந்த தாக்குதலின் பின்னனியில் ஈரான் உள்ளதாக பிரித்தானியாவும் அமெரிக்காவும் கருதுகின்றன. இந்த தாக்குதலின் பின்னர் யேமன் பகுதியில் உள்ள ஈரான் சார்பு குழு ஒன்று சவுதி அரேபியாவின் இரண்டு என்ணை குழாய்களை ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்கியழிக்க முற்பட்டிருந்தது.

தனது எண்ணைக் கப்பல்களை தாக்கியதற்கு பதிலடி கொடுப்பதற்கு சவுதி திட்டமிட்ருந்ததாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கான அனுமதியை சவுதி அமெரிக்காவிடம் கேட்டிருந்தது.

கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவும் ஈரானும் ஒரு நேரடியற்ற மோதல்களில் ஈராக்கில் ஈடுபட்டிருந்தன. ஈராக்கில் உள்ள பெரும்பான்மை சியா முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த குழுக்களை ஈரானே வழிநடத்தியிருந்தது. அமெரிக்கப் படைகள் சந்தித்த இழப்புக்களில் 25 விகிதமானவை இந்த குழுக்களால் ஏற்பட்டவை.

ஆனால் ஐ.எஸ்.ஜ.எஸ் உடனான மோதல்களில் ஈரானுடன் இணைந்தே அமெரிக்கா மோதல்களில் ஈடுபட்டிருந்தது. ஈராக்கில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய பின்னர் ஈரான் அந்த பகுதிகளில் தன்னைப் பலப்படுததியிருந்தது.

சிரியாவில் இடம்பெற்ற போரும் ஈரானின் பலப்படுத்தல்களுக்கு காலத்தை வழங்கியிருந்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. சிரியாவின் மேற்குப் பகுதியில் ஈரான் தனது ஆதிக்கத்தை செலுத்தியதே டொனால் ரம்ப் அரசை சீற்றமடைய வைத்திருந்தது.

ஈரான் பலமடைந்து வருவதை அமெரிக்காவின் நட்பு நாடுகளான அபுதாபி மற்றும் சவுதி ஆகியவை விரும்பவில்லை. அது சுனி மக்களைக் கொண்ட அரபு உலகத்திற்கு அச்சுறுத்தலானது என அவை கருதுகின்றன.
.
.