இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால் காசாவில் 30,000 பொதுமக்கள் பலி

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதலால் இதுவரையில் 30,000 இற்கு மேற்பட்ட மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர் இது அங்கு வாழும் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 1.3 விகிதம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் காசா பகுதியின் சுகாதார அமைச்சு கடந்த வியாழக்கிழமை(29) மேலும் தெரிவித்துள்ளதாவது.

கொல்லப்பட்டவர்களில் பெருமளவானொர் குழந்தைகளும் பெண்களுமாவார்கள். கடந்த வியாழக்கிழமை மட்டும் 24 மணிநேரத்தில் 81 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30,035 பேர் இதுவரையில் கொல்லப்பட்டதுடன், 70,000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பலர் வைத்தியசாலைகளுக்கு எடுத்து வராமல் அடக்கம் செய்யப்பட்டதால் கொல்லப்பட்டவர்களின் தொகை தற்போதைய தகவல்களை விட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. மேலும் பல ஆயிரம் மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, காசா சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் மிகவும் நம்பகமானவை எனவும், அவர்களின் தகவல் ஆய்வுப் பணிகள் முன்னைய காலங்களில் சிறப்பாக செயற்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.