உரிமைகளுக்கு வித்திடும் தொழிற்சங்க பலம் – துரைசாமி நடராஜா

சமகாலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளச் செய்வதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் அதிகமாகும்.இதனை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் ஐக்கியத்துடனும் கட்டுக்கோப்புடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.இதிலிருந்தும் தொழிற்சங்கங்கள் விலகிச் செல்லுமிடத்து பாதக விளைவுகள் பலவற்றுக்கும் தொழிலாளர்கள் முகம் கொடுக்க நேரிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

malaiyakam 1 உரிமைகளுக்கு வித்திடும் தொழிற்சங்க பலம் - துரைசாமி நடராஜாதொழிற்சங்கங்கக் கலாசாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது.பல வகைகளில் தொழிற்சங்கள் தொழிலாளர்களுக்கு தோழனாக விளங்குகின்றன. உலகில் தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கக் காரணம் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உரிமைகள் என்பவற்றைப் பேணி அவர்களை சுதந்திரமானவர்களாக வாழவைப்பதற்காகும்.இந்நிலையில் தொழிலாளர் ஒருவர் தான் சார்ந்துள்ள தொழிற்சங்கத்தினதும், தனது நாட்டு தொழிற்சங்க இயக்கத்தினதும் வரலாறு குறித்து தெரியாமலும், தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் முக்கியத்துவத்தை உணராமலும், தொழிற்சங்கமொன்றில் தனது உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? என்பதை அறிந்து கொள்ளாமலும் இருக்கும் வரையில் ஒரு தொழிற்சங்கத்தினால் அவருக்கு எவ்வித  பலன்களோ அல்லது அவரால் தொழிற்சங்கத்திற்கு எவ்வித நன்மைகளோ ஏற்படப்போவதில்லை.மாறாக இவர் தொழிற்சங்கத்தில் வெறுமனே அர்த்தமற்ற ஒரு அங்கத்தவராக இருக்க வேண்டிய ஒரு நிலையே ஏற்படும் என்பது சிரேஷ்ட தொழிற்சங்கவாதிகளின் கருத்தாகும்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு ஆற்றும் பணிகள் அளப்பரியன.அவை பின்வருமாறு அமைந்துள்ளன.தொழிலாளர்களின் கல்வி அபிவிருத்திக்கு வலுசேர்ப்பது இதில் முக்கியமானதாகும்.கல்வி நடவடிக்கைகள் இரு வகைப்படும்.தொழிற்சங்க நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தொழிற்சங்கக் கல்வி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. மற்றையது அறிவை வளர்ப்பதற்கான முறைசார் கல்வியாகும்.மேலும் கல்வி சம்பந்தமான புலமைப் பரிசில்களை சுயமாகவும் சர்வதேச, தேசிய நிறுவனங்களுடன் இணைந்தும் பெற்றுக் கொடுப்பதும் தொழிற்சங்கங்களின் இலக்காகும்.அத்தோடு கலை, கலாசார, விளையாட்டு அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளுக்கும் தொழிற்சங்கங்கள் தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை வழங்க வேண்டிய தேவையுள்ளது.இவற்றோடு மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் ஊடாக சமூக அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்பு நல்குவதையும் தொழிற்சங்கள் ஒரு குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

இவற்றுடன் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே தொழில் ரீதியான பிணக்குகள் ஏற்படும்போது அவற்றை தீர்த்து வைப்பதிலும் தொழிற்சங்கங்களின் வகிபாகம் அதிகமாகும்.சுமுகமான பேச்சுவார்த்தை,சட்ட ரீதியான முயற்சிகள்,வேலை நிறுத்தப் போராட்டங்கள், மெதுவாக பணி செய்யும் நடவடிக்கைகள் என்று பல அணுகுமுறைகளையும் பின்பற்றி தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க தொழிற்சங்கங்கள் முற்படுகின்றன.மேலும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிலாளர்கள் சார்ந்த சட்டங்கள், விதிமுறைகள், தீர்மானங்கள் என்பவற்றை ஆட்சியாளர்கள் உருவாக்குவதற்கும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு அவசியமாகின்றது.

நாடுகடத்தப்பட்ட பிரிஸ்கேடில்

இந்த வகையில் மலையக தொழிற்சங்க கலாசாரம் குறித்து நோக்குகின்றபோது மலையக பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் உள்நுழைவது ஒரு இலகுவான காரியமாக இருக்கவில்லை.’தோட்ட உரிமையாளர்கள் தொழிற்சங்க இயக்கம் தோற்றம் பெறுவதை கடுமையாக எதிர்த்தனர்.20 ம் நூற்றாண்டில் நகர்ப்புறங்களில் எழுந்த தொழிற்சங்க இயக்கம் நகர தொழிலாளர்களையும், தோட்டத் தொழிலாளர்களையும் கூட்டாக இயக்கும் முயற்சிகளிலோ அல்லது பெருந்தோட்டப் பகுதிகளுக்கு இயக்கத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை.

malaiyakam 12 உரிமைகளுக்கு வித்திடும் தொழிற்சங்க பலம் - துரைசாமி நடராஜா1930ம் ஆண்டளவில் இந்தியத் தொழிலாளர்கள் இந்நாட்டில் நிரந்தரமாக வேரூன்றிய போதிலும் நகர்ப்புறத்தில் வளர்ச்சியுற்ற தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அவர்களை அந்நியர்களாகவே கருதினர்.கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றபோது தோட்ட உரிமையாளர்கள் தமது தொழிலாளர்கள் நகரங்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு தடை செய்தனர்.அவ்வேலை நிறுத்தங்கள் தோட்டங்களுக்குப் பரவுவதை தவிர்க்கவே அவ்வாறு செய்தனர்.1920 களில் நகரத் தொழிலாளர் மத்தியில் குழப்பநிலை காணப்பட்டபோது தோட்டத் தொழிலாளர்களுக்கென்று போராட தொழிற்சங்கங்களோ அல்லது வேறு பொதுநல சங்கங்களோ உருவாகி இருக்கவில்லை.தொழிற்சங்க இயக்கத்தினர் தோட்டங்களுக்குச் சென்று பணியாற்ற முடியாதபடி 1917 ம் ஆண்டின் 38 ம் இலக்கச் சட்டம் தடைவிதித்தது’ என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரேஸ்கேடில் என்ற அவுஸ்திரேலியர் நாடு கடத்தப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தெரிந்ததாகும்.1925 ம் ஆண்டின் பின்னர், இந்திய தேசிய இயக்கத்தினால் கவரப்பட்ட கோ.நடேசையர் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் கூடிய அக்கறையை வெளிப்படுத்தத் தொடங்கினார்.தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாததைக் கண்டித்து பிரசுரங்களை வெளியிட்டார்.1926 – 1931 காலப்பகுதியில் சட்ட சபையில் இந்திய உறுப்பினராக பதவிவகித்த நடேசையர் தொழிலாளர்களின் சார்பில் ஈடுபாட்டுடன் வாதாடியிருந்தார்.

பல்வேறு நெருக்கீடுகளுக்கு மத்தியில் தோட்டத்தில் உள்நுழைந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்கள் வாழ்விலிருந்தும் பிரிக்கமுடியாத சக்தியாக உருவெடுத்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.இந்நிலையில் சமகாலத்தில் தொழிற்சங்களின் பணிகள் தொடர்பில் அதிருப்தியான வெளிப்பாடுகள் தொழிலாளர்களிடையே இருந்து வருகின்றன.தொழிற்சங்கவாதிகள் அரசியல் பிரவேசத்திற்கு ஏணியாக தொழிற்சங்கங்களை பயன்படுத்தி வருவதாலும் ஏனைய பல நிலைமைகளினாலும் தொழிற்சங்க கலாசாரம் இன்று படிப்படியாக வலுவிழந்து வருவதாக தொழிலாளர்கள் விசனப்படுகின்றனர்.எனினும் சமகாலத்தில் தொழிற்சங்க கலாசாரத்தின் தேவைப்பாடு அதிகளவில் உணரப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் சவால்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.தொழில் ரீதியான நெருக்கீடுகள் மற்றும் உரிமை மீறல்கள் இதில் அதிகமாகும்.தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களையும் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதும் கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் பலவற்றையும் நிர்வாகத்தினர் மீறி வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதனைக் கண்டித்து மலையகத்தின் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்த சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.

உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது தொழிலாளர்களுக்கு கானல் நீராகியுள்ளது.அதிகரித்த .உற்பத்தி செலவு மற்றும் நிர்வாக செலவுகள், தேயிலை விலை வீழ்ச்சி போன்ற இன்னோரன்ன விடயங்களை காரணங்காட்டி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்றுக் கொடுப்பதில் கம்பனிகள் இழுத்தடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.இதனால் மாற்றுத் தொழில் வாய்ப்பின்றி தேயிலைத் தொழிற்றுறையை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வரும் நிலையில் பொருளாதார பின்னடைவானது ஏனைய துறைகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது.எனவே தொழிலாளர்களுக்கு எதிரான உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

தனித் தேசிய இனம்

வருடாந்தம் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி வரும் நிலையில் இவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தொழிற்றிறன் மிக்க தொழிலாளர்களாக இவ்விளைஞர்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.இதேவேளை அரசதுறை தொழில் வாய்ப்புக்களிலும் மலையகத்தவர்களை ஈடுபடச்செய்வதற்கான அடித்தளத்தை இடுதலும் அவசியமானதாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் தொழிலில் இருந்தும் இளைப்பாறிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதில் இழுபறி நிலைமைகள் காணப்படுகின்றன.ஜனவசம,அரச பெருந்தோட்ட யாக்கம் ,எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 7000 – 10,000 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்ட ரீதியான கொடுப்பனவுகளான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைகாலப்பணம் என்பன நீண்ட காலமாக வழங்கப்படாதிருப்பதாக கடந்தகால அறிக்கையொன்று வலியுறுத்துகின்றது.இவ்வாறாக இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத்தொகை 1800 மில்லியனுக்கும் அதிகமாகும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.இது குறித்து அரசியல் தொழிற்சங்கவாதிகள் கவனம் செலுத்தி அவற்றை உரியவாறு பெற்றுக்கொடுக்க ஆவண செய்தல் வேண்டும்.

malaiyakam 11 உரிமைகளுக்கு வித்திடும் தொழிற்சங்க பலம் - துரைசாமி நடராஜாமலையக மக்களின் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை என்பன கனவாகி வருகின்றன.இவற்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றபோதும் இது இன்னும் சாத்தியமாகாத நிலையில் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வருகின்றனர்.இதேவேளை மலையக மக்களை தனித்தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் உரிமைகள் இழந்த சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர்.இன்றுவரை வாக்குரிமையை மட்டுமே கொடுத்து ஓரங்கட்டப்பட்டுள்ள மலையக சமூகம் இனியாவது தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘கித்சர’ அமைப்பும் அண்மையில் வலியுறுத்தி இருந்தது.

பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புதிய வடிவத்துடன் அதிகரித்து வரும் நிலையில் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளவும் இம்மக்களை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் தொழிற்சங்கபலம் மிகவும் இன்றியமையாததாகும்.இப்பலத்தின் ஊடாக சாதக விளைவுகளுக்கு வித்திட முடியும்.இந்நிலையில் தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த நோக்கோடு புத்தாக்க செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் புதுடில்லியில் இடம்பெற்ற தெற்காசிய தொழிற்சங்க கருத்தரங்கில் கலந்துகொண்டு வலியுறுத்தியமை முக்கியமாக நோக்கப்பட வேண்டியதாகும்.அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 200 வருடங்களாக கடந்து வந்தபாதையில் அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதானிகளிடம் எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.