இளைஞனின் மரணத்தில் முறையான நீதி விசாரணை இடம்பெறுமா? சாணக்கியன் எம்.பி கேள்வி

447 Views

மட்டக்களப்பில் காவல்துறையின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ள  சந்திரன் விதுஷனின் மரணம் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து காவல்துறையினரால்  கடந்த 2ம் திகதி கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும்  இளைஞர்  3ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது மகனை  கைது செய்து கொண்டுசென்று,  அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டதைத் தொடர்ந்து சடலம் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இறப்புக்கு காரணம் போதைப்பொருளை உட்கொண்டது என தெரிவிக்கப்பட்டு உடல் குடுப்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழத்தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறித்த இளைஞனின் இல்லத்திற்கு பயணம் செய்து, அவரது தாயாரைச் சந்தித்து இச்சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதன் பின் அவர் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“காவல்துறையினரின் காவலின் கீழ் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். மிகையான ஐஸ் போதைப்பொருள் பாவனையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றிருப்பதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் அந்த இளைஞர் கைவிலங்கிடப்பட்டதுடன் தாக்கப்பட்டார். அதுமாத்திரமன்றி அவர் உயிரிழக்கும்போது காவல்துறையினரின் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

எனவே இச்சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை செய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமா? என  கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் கையாள்வது தொடர்பான விடயங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகள் தொடர்பான ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன’ என்றும் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply