இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டம்- பூரண ஒத்துழைப்பு வழங்க ஜப்பான் நிறுவனம் உறுதி

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டம் சாத்தியமானதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (ஜெய்க்கா) தெற்காசிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டெருயுகி இடோ தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் ஜெய்க்கா பணிப்பாளர் நாயகத்துக்கு மிடையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத் திட்டம் தொடர்பிலும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின் மூலம் நாட்டில் ஏற்படும் பொருளாதார உறுதிப்பாடு தொடர்பில் நாட்டு மக்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.