ராஜபக்சக்களுடன் இணைந்திருக்கும் எவராலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊழல்வாதிகள் உட்பட பெரும்பாலான உறுப்பினர்களை இழந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று மத்துகமயில்  நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கட்சியை  குறைமதிப்பிற்கு உட்படுத்தி   சுதந்திரக் கட்சியை அழித்ததாக அவர் கூறினார்.

தனது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆறு அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து 15 பில்லியன் ரூபாவை ராஜபக்சக்கள் சுருட்டிக் கொண்டதாக குற்றம் சுமத்தினார்.

“சிறிசேன சிறப்பாக செயற்பட வில்லை. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு யாரும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறிய சில ஊழல்வாதிகள் அவ்வப்போது என்னை அணுகுகின்றனர். ஊழல் செய்தாலும் இவர்களுக்கு அதிக வாக்காளர்கள் இருப்பதாக என்னிடம் கூறுகின்றனர். இருப்பினும், நான் அப்படிப்பட்டவர்களுடன் வேலை செய்ய மாட்டேன்.

பாரிய ஊழல் காரணமாகவே நாடு மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளது. அந்த ஊழலை எதிர்த்து கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க கடந்த வருடம் மக்கள் வீதியில் இறங்கினர். இதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார்.

இலங்கையில் ராஜபக்சக்களின் கீழ் ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டது, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் எவரும் நாட்டை மீட்டெடு க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.