இந்த ஆட்சிக்கு வாக்களித்தவர்களே இன்றைய சூழ்நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும்

487 Views

கடந்த ஆட்சிக்காலத்தினை குறை கூறிக்கொண்டு இந்த ஆட்சிக்கு வாக்களித்தவர்களே இன்றைய சூழ்நிலைக்கு பொறுப்பேற்கவேண்டும் என மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்ற கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஒரு சிலர் தனிமைப்படுத் தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப் பட்டுள்ளனர்.

நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும் இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக் கூறவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

மாவீரர் தின நாட்களில் வீடுகளில் தமது உறவுகளை நினைவு கூர்ந்ததை கூட வீடுகளுக்குள் புகுந்து தடை செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம்.

ஆனால் இன்று மாவீரர்களை நினைவு கூருவதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனது. தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்க வேண்டும் என்பதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பொறுப்பு கொத்தபாயவுக்கும் மகிந்தவுக்கும் வாக்களித்தவர்களையே சேரும்.

இதுதொடர்பில் நான் சிங்கள அமைச்சர் ஒருவருடன் கலந்துரையாடியபோது தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் உள்ள காணிகளை சிங்களவர்களை குடியேற்றுவதாகவும், தமிழர்கள் அனுஸ்டிக்கும் மாவீரர் தினம் போன்றவற்றினை தடைசெய்வோம் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்ததாகவும் அதனையும் கேட்டு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்களென்றால் தமிழர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லையெனவும் என்னிடம் தெரிவித்தார்.

ஒரு தாய் தனது பிள்ளையினை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை அமைத்துக்கொடுத்த ஆளும் கட்சியுடன்இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை எடுக்கவேண்டும்.

நேற்றைய தினம் இந்துக்களின் மிக முக்கிய விரதமான கார்த்திகை விளக்கீட்டின் போது தீபம் ஏற்றியவர்கள் கூட கைதுசெய்யப்பட்டதை காணமுடிந்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் தீபங்களை உடைத்தாகவும் அறிகின்றோம். சிலஆலய வளாகங்களிலும் கார்த்திகை விளக்கீட்டு நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டதாக அறிகின்றோம். இந்துமத வழிபாடுகள் செய்வதற்கும் இந்த அரசாங்கம் தடையென்றால், இந்த நாட்டில் தமிழர்களுக்கு என்ன நிலைமை வரப்போகின்றது என்ற அச்சமேயுள்ளது.

நாங்கள் தமிழர்களின அடையாளத்தினை பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் தேசிய கட்சிக்கு வாக்களித்திருக்க வேண்டும். காலம்காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல்கொடுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக பயணித்திருந்தால் நாங்கள் இந்த அரசுக்கும் சர்வதேசத்திற்கும் இந்த விடயம் தொடர்பில் தெளிவான செய்தியை வழங்கியிருக்கமுடியும்.

Leave a Reply