‘இந்திய கடலில் மீன் இருந்தால் ஏன் இலங்கை பகுதிக்குள் செல்கிறோம்’ – இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி கருத்து

672 Views

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்  இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா.

மேலும் கச்சத்தீவு மற்றும் இலங்கை பகுதியில்தான் அதிக மீன்கள் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபடுவதால் அடிக்கடி அவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுவதும் படகுடன் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அதே நேரம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாட்டினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் கண்ட நேர்காணலில், இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா, “இராமேஸ்வரத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் வைத்து பல குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் இங்கிருந்து இருக்கும் மீன்பிடி எல்லை மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லை தாண்டுவதாக தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கைது செய்வது, சிறை வைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பிரச்னைகளால், மீன்பிடி தொழிலையே இங்கு பலரும் விட்டு செல்வதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவிக்கிறார்.

இருநாட்டு மீனவர்களும், அரசும் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவராத பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் போனால், மீனுக்கு பெயர் போன இராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலே இருக்காது என்று  தெரிவித்துள்ளார்.

Leave a Reply