இந்தியத் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து 43 பேர் தீயில் கருகி பலி

இந்தியத் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஜான்ஸி ராணி சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி ஜான்ஸி ராணி சாலை, அனாஜ் சந்தைப் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு அதிகாலை 5.22 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் தெரியவரவில்லை. இந்தச் சம்பவத்தில் 43பேர் உயிரிழந்ததாகவும், 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றது.

விபத்து நடந்த இந்தப் பகுதி குறுகிய, மிகவும் சனநெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு பயணப் பைகள் , சூட்கேஸ் விற்பனை செய்யப்படுவதுடன், அவற்றிற்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.

இன்று(8) அதிகாலை பை தயாரிக்கும் பிரிவில் ஏற்பட்ட தீவிபத்து, மற்றைய பகுதிகளுக்கும் பரவியது. தீ எப்படிப் பிடித்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் என்பதும், அவரக்ள் பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்ததும், தீ காரணமாக உண்டான புகையை சுவாசித்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்து பொலிசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதனால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். தீவிபத்தில் படுகாயமடைந்து, டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற சிலர் காயங்களுடன் ஆர்.எம்.எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply