இந்திய குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத் தமிழர்களுக்கு இடமில்லை

இந்திய சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமை வழங்குவது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இது இந்தியாவில் குடியேறி வசித்து வரும் ஈழத் தமிழர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் 1இலட்சம் பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக குடியேறியுள்ளனர். இவர்களுக்கு இந்தியக் குடிரிமை வழங்கப்பட வேண்டும் என ஈழத் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றமும் இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் குடியுரிமை மசோதாவில் ஈழத் தமிழர்களுக்கும், இந்தியாவில் வாழும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பற்றியும் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, இந்தியாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்கள் தவிர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக தமிழக கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், இந்த மசோதா ஈழத் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டும் வகையில் அமைந்துள்ளது எனவும் உரியவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.