ஆஸி- தடுப்பு முகாம் அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதில் தாமதம்

215 Views

ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த ஆண்டில் 1,100க்கும் மேற்பட்ட அகதிகளை அமெரிக்கா மீள்குடியமர்த்தும் என எதிர்ப்பார்ப்பதாக ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த அக்டோபர் 2017 முதல் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்த 870 அகதிகளை அமெரிக்கா மீள்குடியமர்த்தியுள்ளதாகவும் 250க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு மீள்குடியமர்த்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய செனட் குழுவிடம் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை துணைச் செயலாளர் மார்க் அப்லாங்.

கடந்த 2013 ஆண்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் குடியமர்த்த மாட்டோம் எனச் சொல்லி வந்த ஆஸ்திரேலிய அரசு, அதற்கு தீர்வாக அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் கையெழுத்திட்டது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக் கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய  அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறியிருக்கும் ஆஸ்திரேலிய உள்துறை துணைச் செயலாளர் மார்க் அப்லாங்,   அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் 2021க்குள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply