‘ஜனநாயகத்திற்கு அநீதியான இருபதாவது திருத்தத்தை கைவிடுங்கள்’

ஜனநாயகத்திற்கு அநீதியான, சுயாதீனத்திற்கு விரோதமான இருபதாவது திருத்தத்தை கைவிடுங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்திடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்த வேண்டுகோளில்,

இலங்கையில் இரண்டு மொழிகளைப் பேசுகின்ற மூவின மக்கள் வாழுகின்றனர். காலத்திற்கு காலம் அரசியல் ரீதியாக கொண்டுவரப்படும் சட்டங்களும், திருத்தங்களும் சமூக மட்டத்தில் சவாலுக்கு உட்பட்டு பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன. இதனாலேயே இந்த நாடு கடந்த காலங்களில் அவலங்களைச் சந்தித்தது.

தற்போது கொண்டுவரப்படுகின்ற இருபதாவது திருத்தம் நாட்டு நிலைமைகளை இன்னும் மோசமாக்கும். ஆகையால் இருபதாவது திருத்தத்தைக் கைவிடுமாறு தமிழ்பேசும் கல்விச் சமூகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கடந்தகால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இந்நாட்டில் வாழுகின்ற சகல மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அதுவே ஜனநாயக பண்பு. எனும் கருத்தினை உள்ளீர்த்து ஜனாயகத்திற்கு அநீதியான, சுயாதீன தன்மைக்கு விரோதமான இருபதாவது திருத்தத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

image0 3 1 'ஜனநாயகத்திற்கு அநீதியான இருபதாவது திருத்தத்தை கைவிடுங்கள்'

இதனைக் கொண்டுவரும் நோக்கமானது தனிமனித ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதோடு, சர்வாதிகார முறைமையை மேலெழச் செய்து சிறுபான்மைச் சமூகத்தை நசுக்குகின்ற தொழிற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். கற்றோர் அவையிலும்சரி, சமத்துவ உலகிலும்சரி இது ஏற்புடையதல்ல.

குறுகிய அரசியல் நலனுக்காக கொண்டுவரும் இந்த இருபதாவது திருத்தமானது நீண்டகால அபிலாசைகளுக்கான முற்றுப்புள்ளியாக அமைந்துவிடக்கூடாது.

இந்நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் இலங்கையரென்றால், அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பு தேவை. அது எல்லோராலும் வரையப்பட்டதாக இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் இலகுவில் புரியக்கூடியதாக இருக்க வேண்டும். அதனை விடுத்து பெரும்பான்மை எனும் ஆதிக்க நோக்கோடு இதனை இந்த நாட்டிற்காக கொண்டு வருவது பொருத்தமானது அல்ல.

எதிர்கால தலைமுறையின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களாவது சுதந்திரமாக, சுபீட்சமாக இந்நாட்டில் வாழ்வதற்கு வழியேற்படுத்துங்கள். கடந்தகால சந்தத்தியினர் பட்ட அவலங்கை எதிர்காலச் சந்ததியும் சுமக்க வழியேற்படுத்தாதீர்கள்.” என்று கூறியுள்ளது.