“அமெரிக்கா ஒன்றுபட வேண்டிய நேரம் இது” – ஜோ பைடன்

512 Views

ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ளதையடுத்து உரையாற்றுகையில், வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன் என உறுதியளித்துள்ளார்.

மேலும்  “இது அமெரிக்கா ஒன்றிணையும் நேரம்“ என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிவுப்பெற்றது, ஆனால் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்றன. வெற்றியைத் தீர்மானிக்கும் அதிமுக்கிய மாநிலங்களான (Battleground states) பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, நிவேடா, நார்த் கரோலினா போன்ற மாநிலங்களில் இழுபறி நீடித்ததால், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கும் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் பலத்த போட்டி நிலவியது.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற தேவைப்படும் 270 இடங்களை விட கூடுதலாக 9 இடங்களில் அவர் முன்னிலை பெற்றார்.

மேலும் பென்சில்வேனியாவில் சனிக்கிழமை மாலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில், பைடனுக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

அதே நேரம் ஜோ பைடனின் அரசில் முதல் கருப்பின பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்  தெரிவாகியுள்ளார்.

தனது தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றிய ஜோ பைடன், “இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர், நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்.

சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். நான் இந்த பதவிக்கு வந்ததற்கு காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்க, இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மறுகட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான். எனது இந்த நோக்கத்திற்காக  எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம், நமது எதிர்தரப்பினரை எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம். எனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான்” என்றார்.

இதைத் தொடர்ந்து கமலா ஹாரீஸ், “நீங்கள் நம்பிக்கையை தேர்வு செய்தீர்கள். ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை, உண்மையை தேர்வு செய்தீர்கள். அதனால் நீங்கள் பைடனை தேர்வு செய்தீர்கள்” என்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் முறைப்படி பதவியேற்பார்.  தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது.

அதே நேரம் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் தரப்பு, பல மாகாணங்களில் வழக்கு தொடுத்துள்ளது. ஏற்கனவே அவற்றுள் சில வழக்குகள் தள்ளுபடியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply