அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் – ரசியத் தலைவர்

439 Views

அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார். ஆயுத போட்டியை கட்டுப்படுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக ஏவுகணை தடை ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை இரு நாடுகளும் தயாரிக்க கூடாது. ஆனால், இந்த விதிமுறையை ரஷ்யா மீறுவதால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா சமீபத்தில் முறித்துக் கொண்டது.

இந்நிலையில், 500 கி.மீ தூரம் சென்று தாக்கும் டொமஹாக் ரக புதிய ஏவுகணையை லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான் நிகோலஸ் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதித்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகன் அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, மாஸ்கோவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய ரஷ்ய அதிபர் புடின், ‘‘ நாம் அதிக பொருள் செலவிலான ஆயுத போட்டியில் ஈடுபடமாட்டோம் என்றாலும், நமது நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையானதை செய்வோம். அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணை சோதனைக்கு தயாராகும்மாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்,’’ என்றார்.

Leave a Reply