வியாழன் கோளுக்குள் ஊடுருவிய விண்கல்

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக விளங்கும் வியாழன் கோளுக்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர், செலெஸ்டிரான் 8 தொலைகாட்டி மூலம் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் வியாழன் கோளின் இடதுபுறம், கீழாக வெள்ளை நிறப் புள்ளி ஒன்று தென்படுகின்றது. இது மிகப் பெரிய விண்கல் ஒன்று, வேகமாக கோளுக்குள் நுழைந்து செல்வதைக் காட்டுகின்றது. இது தொடர்பாக பதிவுகளை மேற்கொண்ட சாப்பல், ஒரேயொரு பிரேமில் வியாழன் கோளுக்கு ஏற்பட்ட பாதிப்பை திறமையாக பதிவு செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 1994ஆம் ஆண்டு வியாழன் கோளை எஸ்.எல்.9 என்ற விண்கல் தாக்கியது படம்பிடிக்கப்பட்டது. இது சூரியனின் மேற்பரப்பைவிட அதிகம் வெப்பம் நிறைந்ததாகும்.

இதனை வானியல் அறிஞர் டாக்டர் ஹெய்டி பி. ஹாம்மெல் ஹப்பிள் தொலைக்காட்டி மூலம் படம் பிடித்திருந்தார். இவர் தற்போது சாப்பலின் கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.