பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சிறப்பு பேட்டி

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் என சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியதோடு ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்குவதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டத்தரணி கே.வி.தவராஜா அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் நாட்டில் அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- மிக மோசமாக நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட இரண்டு சட்டங்கள் அமுலில் இருக்கின்ற நிலையில் எதற்காக அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டது என்ற கேள்வி இல்லாமில்லை. தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் ஒரு சிறு குழுவினரே தொடர்புபட்டுள்ளமையால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமானது. எனினும், பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த 41 ஆண்டுகளாக நாட்டில் அமுலில் உள்ளது. ஏறக்குறைய நிரந்தரச்சட்டம் போன்றாகி விட்டது.

அவ்வாறிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தொடர்ந்தும் பயன்படுத்துவது நிரந்தரமாகவே பயங்கரவாத சூழலையும் அதற்கேற்ற அரசையுந்தான் உருவாக்குவதற்கு வழிசமைப்பதாய் இருக்கும். அவசரகாலச் சட்டத்தினைப் பொறுத்த வரையில் ஒரு மாதம் வரையில்த்தான் அதனை அமுலில் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு தடவை பாராளுமன்றத்தின் அனுமதி அவசியமாக இருக்கின்றது. தற்போதைய தாக்குதல்களில் இஸ்லாம் அடிப்படை வாதத்தின் பிரகாரம் பணபலம் உள்ளிட்ட சகல வசதி படைத்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளார்கள். 1983 கலவரம், 30 ஆண்டு விடுதலைப்போராட்டம் ஆகியவற்றுக்கும் தற்போதைய தாக்குதல் களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

அப்படிப் பார்க்கின்றபோது, நாட்டில் அவசரகால சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்ற அடிப்படையில்த்தான் அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்திலும் ஏகமனதான அங்கீகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இவ்வாறு நடைபெறுவதுதான் வழமையாக இருக்கின்றது. ஆனால் அதன் பிரயோகத்தினையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

கேள்வி:- பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதனால் பல்கலைகழக மாண வர்களின் கைதுவரை அதன் எதிர்வினையை தமிழர்கள் உணர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்க, அவசரகால சட்டமும் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டங்களால் தற்போது தமிழர் தாயகம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதுதான் பொதுப்படை. ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நான் இதற்கு இரண்டு உதாரணங்களை கூற விளைகின்றேன். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய குற்றச்சாட்டில் ஒரு கார் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கார் வியாபாரம் செய்வதற்காகவே குறித்த நபருடன் தொலைபேசி வாயிலாக கதைத்துள்ளார். இவருக்கு அந்த நபர் சிரியா சென்றாரா? பயிற்சி பெற்றாரா? என்றெல்லாம் தெரியாது.

அப்படியிருக்க கார் வர்த்தகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இவர் மீது அவசரகால ஒழுங்கு விதிகளிலோ, அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. பொதுச்சட்டத்தின் கீழ்த்தான் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏனைய விசாரணை அறி க்கைகளின் பிரகாரம் இவர் தொடர்புபட்டு ள்ளாரா என்பதை கண்டறியும் வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று தான் வெல்லம்பிட்டி தொழிற்சாலையில் கடமையாற்றிய பத்துபேரில் ஒன்பது பேருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ அல்லது அவசரகால சட்டத்தின் கீழோ கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு சட்டமா அதிபரின் அனுமதியின்றி பிணை அனுமதி வழங்க முடியாது. ஆகவே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்திலும் சுற்றிவளைப்புக்களின் போதும் நடைபெறும் அதிகமான கைதுகள் பொதுச்சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ளப்படுகின்றது. அங்கு பயங்கரவாத தடைச்சட்டமோ அவசரகால ஒழுங்கு விதிகளோ பயன்படுத்துவதாக இல்லை.ஆனால், தாயகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், தேநீர்ச் சாலை நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பயங்கர வாதத்திற்கு ஊக்கமளிக்கின்றார்கள் என்று கூறி அவர்களை பயங்கரவாத தடைச்சட் டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். தெற்கில், குண்டுகள் வெடித்து அதனுடன் தொடர்புடைய எத்தனையோ கைதுகள் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் கைதுகள் இடம்பெற்றுள்ளன. என்ன குற்றம் இழைக்கப்பட்டது. அதனுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காவே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த குற்றத்தினை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இன,மத,மொழி வேறுபாடு இல்லை. அப்பிடியிருக்கையில், தெற்கில் ஒருமுறையிலும் வடக்கில் இன்னொரு முறையிலும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதனடிப்படையில் பார்க்கின்றபோது, அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால நிலைமையில் தமிழர்களை இலக்குவைத்து வலிந்து பாய்கின்றமைக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது உதாரணமாகின்றது.

கேள்வி:- பல்கலைக்கழக மாணவர்களின் கைது முறையற்றதொன்று என்ற பாரிய விமர்சனம் காணப்படுகின்றதே?

பதில்:- முதலாவதாக, பல்கலைக்கழக வாளகத்தினுள் சோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இரண்டாவதாக கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு வலு ஊட்டினார்கள் என்று கூறப்படுகின்றது. ஒளிப்படத்தினை அவர்கள் வைத்திருந்ததாகவும் கூறுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் பயன்படுத்திய கட்டடம் அவர்களுக்கு மட்டும் தனியான
உரித்தினைக் கொண்டிருக்கவில்லை. பதவிகள் மாறுகின்றபோது பதவிகளை ஏற்பவர்கள் அந்தக் கட்டடத்தினை பயன்படுத்துவதே வழமையாக இருகின்றது. அப்படியிருக்கையில், இந்த கைதின் தன்மையிலேயே பாரிய சந்தேகங்களும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதற்குதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் அது சம்பந்தமான விவாதத்தினை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகின்றபோது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இல்லை.

அவசரகால நிலைமைகளின் போதும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் கைதானவர்கள் அந்த சட்டங்கள் நீக்கப்பட்டாலும் அவர்கள் மீதான வழக்குகள் அந்தச்சட்டங்களின் தன்மைகளின் அடிப்படையில்த்தான் இருக்கும். அதில் மாற்றங்கள் நிகழும் என்று கூறுவது தவறாகும்.

கேள்வி:- புதிய பங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றபோதும் தற்போது உலகத் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்தவதற்கு அவசியமானது என்று காரணம் கூறப்படுகின்றதே?

பதில்:- முதலாவதாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் அமுலாகின்றபோது, அவசரகால ஒழுங்கு விதிகள் நாட்டில் நிரந்தரச் சட்டமாக மாற்றமடையும் சூழலே ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக நீதிக்காக, உறவுகளின் விடுதலைக்காக, சொந்த நிலங்களுக்காக போராடும் தமிழினத்தின் சனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்துமே கட்டுக்குள்ளாகும் பாரிய ஆபத்து உள்ளது. இதனை விடவும் நாட்டின் அன்றாட நிலைமைகள் ஒருவிதமான பதற்றத்துடனே இருக்கும் நிலைமைகளே ஏற்படும். தொழிற்சங்க போராட்டம் முதல் தனி நபரின் கோரிக்கைகளையே முழுமையாக கட்டப்படுத்தும் வல்லமை இந்த சட்டத்திற்கு காணப்படுகின்றது.

மேலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் மரண தண்டனை உள்வாங்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் தனை சட்டமாக்குவதென்றால் சர்வசன வாக்கெடுப்பு அவசியமாகும். இந்த விடயத்தினை உயர்நீதிமன்றம் குறித்த சட்டம் மீதான வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருக்கும். ஆகவே அச்சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது அந்த விடயம் முக்கியமானதாக கருதப்படும். ஆகவே அவசாரகால சட்டமும், பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் அமுலாக்கப்படுவது தமிழர்களை மேலும் நெருக்கடியான கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சூழலையே உருவாக்கும்.

கேள்வி:- ஒருவர் வெளிநாடு சென்று பயிற்சி பெற்றாலோ பயங்கரவாத தொடர்புகளைப் பேணிவந்தாலோ அவரை கைது செய்வதற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் நாட்டில் போதுமானதாக இல்லையென பிரதமர் ரணில் கூறியிருக்கின்றாரே?

பதில்:- உண்மையிலேயே அது சட்டங்கள் பற்றிய அறியாமையின் வெளிப்பாடாகும். அவசரகால சட்டம் அமுலில் இல்லாது விட்டாலும், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இல்லாது விட்டாலும், பொதுச்சட்டத்தின் கீழ் உள்ள குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 120, 121 ஆம் பிரிவுகளின் அடிப்படையில் அரசுக்கு எதிராக எத்தகைய நபர்கள் குற்றம் புரிந்தாலும் அவர்கள் மீது விசாரணைகளை, வழக்குகளை தாக்கல் செய்து தண்டனை வழங்க முடியும்.

இதனை விடவும், குண்டுத்தாக்குதல் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே அறியப்பட்டள்ளதாகவும் அதனை தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. குண்டுத்தாக்குதல்கள் சம்பந்தமாக ஒருவர் மீது ஒருவர் விரல் சுட்டும் நிலமையில் பொறுப்புக்கூறுபவர் யார் என்பதும் வினாவாகின்றது.

குறிப்பாக, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கிய தரப்புக்கள் அறிந்துள் ளதாக கூறப்படுகின்றது. குற்றவியல் தண்டனைக்கோவைச் சட்டத்தின் கீழ் நட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் தகவல்களை அறிந்து கொண்டு மௌனம் காப்பதும் குற்றமாகும்.அதனடிப்படையில் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதே போன்று தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயத்தில் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்ற அடிப்படையிலும் அத்துறை சார்ந்தவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கும் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.