ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை – கிரிசாந்தன்

அண்மையில் யாழ் பல்கலைக்களத்தினுள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்,கைதுகள் தொடரிப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் இராஜரட்ணம் கிரிசாந்தன் அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி:- யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில் இராணுவத்தினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்?

பதில்:- யுத்தகாலத்திலும் சரி, அதற்கு பின்னரும் சரி இராணுவத்தினர் பல்கலைக்கழத்தினுள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மாணவர்களும் அதனை விரும்பியிருக்கவுமில்லை. அப்படியிருக்க, ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர் நாட்டில் அசாதாரண சூழலொன்று உருவெடுத்தது. இக்காலத்தில் யாழ்.பல்கலைக்கழகமும் குண்டுதாரிகளின் இலக்கிற்கு உள்ளாகலாம் என்று அச்சமும் காணப்பட்டது.

அதேநேரம் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் சோதனையிட்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் பாதுகாப்புத்தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இதற்கு பல்கலைக்கழக நிருவாகமும் அனுமதி அளித்திருந்த நிலையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு மாணவர்களாகிய நாமும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோம். DSC 0141 ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை - கிரிசாந்தன்

கேள்வி:- சோதனை இடுவதற்காக வருகை தந்திருந்த இராணுவம் ஒளிப்படம் வைத்திருந்ததாக காரணம் காட்டி இரு மாணவர்களை கைது செய்வதற்கு ஏன் விளைந்தது?

பதில்:- பல்கலைக்கழகத்தினுள் சோதனைகளைச் செய்து குண்டுத்தாக்குதல் சம்பந்தமான அச்சநிலையை போக்கி பாதுகாப்பினை உறுதி செய்வது உள்நுழைந்திருந்த இராணு வத்தின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தில் வந்திருந்த இராணுவம் தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படம் இருப்பதையும், மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் மருத்துவ பீட பழைய மாணவரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் இருப்பதையும் காரணம் காட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோரையும் சிற்றுண்டிச்சாலை ஊழியரையும் கைது செய்தனர்.

உண்மையிலேயே இன விடுதலைக்கான போராட்டத்தில் தலைமையேற்று நடத்தியவர் என்ற அடிப்படையிலும் தேசத்தின் விடுதலைக்காக ஆறு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் பல்கலை மாணவன் என்ற அடிப்படையிலும் அந்த ஒளிப்படங்கள் பல ஆண்டுகளாக காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக வந்த இராணுவம் தனது நோக்கத்தினை மாற்றி பயங்கரவாத தடைச்சட்டமும், அவசரகால சட்டமும் நடை முறையில் இருப்பதை தமக்கு சாதகமாக்கி ஒளிப்படம் இருப்பதை காரணம் காட்டி மாணவர்களை கைது செய்தது.

நீண்டகாலமாக இருக்கும் ஒளிப்படங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்களை இராணுவம் தருணம் பார்த்து கைது செய்தமையானது கவலையளிப்பதோடு இராணுவத்தின் முகத்திரையை கிழித்து உண்மையான தோற்றத்தினை உலகறியச் செய்துள்ளது. இதற்கு நாம் கடுமையான கண்டனத்தினை வெளியிடுகின்றோம்.

கேள்வி:- இராணுவம் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து திட்டமிட்டு செயற்படுகின்றது என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இராணுவத்தின் ஆழ்மனது சிந்தனை பல்கலைக்கழக மாணவர்களை அடக்குவதாகத்தான் இருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழகம் என்பது வெறுமனே கற்கைகளை வழங்கும் ஒரு ஸ்தாபனம் மட்டுமல்ல. தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரையில் பின்னிப்பிணைந்துள்ளது.

ஆகவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் என்றுமே கழுகுப்பார்வையுடன்தான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் போர் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காவும், உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட சனநாயக போராட்டங்களில் முன்னின்று உழைத்தார்கள். அதிலும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்களின் கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களில் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு கணிசமாக இருந்தது.

மிகமுக்கியமாக ஐ.நா.வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டபோது அதனை மிகக் கடுமையாக பல்கலை சமூகம் எதிர்த்ததோடு சர்வதேசம் வரையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் நேரடியாகவே பங்கேற்றிருந்தது.

இதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேடையில் அரசியல் பிளவுகள் ஏற்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் உயிர்களை ஆஃகுதியாக்கியவர்களுக்காக உணர்வுடன் நினைவேந்தலைச் செய்வதற்கான கடந்த ஆண்டு முன்வந்திருந்ததோடு இந்த ஆண்டும் அதற்குரிய செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.D1wqEpbWoAAoq0Q ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை - கிரிசாந்தன்

அதுமட்டுமன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுதினமே பல்கலையில் நினைவஞ்சலியை நாம் செய்திருந்தோம். ஆகவே இதுபோன்ற பல விடயங்களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் பங்குதாரர்களாக முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றமையை ஆட்சியாளர்கள் விரும்பவில்லைபோலும். ஆகவே தற்போதைய தருணத்தில் இராணுவத்தினை பயன்படுத்தி பல்கலை மாணவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து அச்சுறுத்தி வைத்து விடலாம் என்று கருதுகின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

கேள்வி:- கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பில் சனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? அதில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றவா?

பதில்:- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் அவசியமாகின்றது. அந்த ஒப்புதல் கிடைக்காத நிலையில்த்தான் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில்த் தான் சனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்புக்குச் சென்றிருந்தோம்.

சனாதிபதிக்கு அவசர அலுவல்கள் காரணமாக கண்டிக்குச் செல்ல வேண்டியேற்பட்டுள்ளதால் அவரை நேரில் சந்தித்திருக்க முடியவில்லை.
இருப்பினும் சனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். அவர்களுக்கு ஒளிப்படம் மற்றும் இராணுவத்தின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தோம். அவர்களும் அந்தவிடயம் பொருத்தமற்ற செயற்பாடு என்பதை ஏற்றுக்கொண்டதோடு சட்டமா அதிபர் புதிதாக பதவி ஏற்றுள்ள நிலையில் 13ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கின்றார். அன்றைய தினமே இவ்விடயம் சம்பந்தமாக சாதகமான முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

கேள்வி:- மாணவர்களின் கைது அடுத்து நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் மக்களின் நீதிக்கான போராட்டத்திலும் ஒட்டுமொத்த பல்கலை மாணவர்களின் பங்களிப்பினை வலுவிழக்கச் செய்துவிடுமா?

பதில்:- நாம் மக்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைகளுக்கும், உயிர் நீத்தவர்களுக்காகவுந்தான் குரல் கொடுத்து வருகின்றோம். இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக்குழுவில் எமது அங்கத்துவமும் இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாம் முழுமையான பங்குதாரர்களாக இருப்போம். அதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மாணவர்களின் கைது இடம்பெற்றவுடனேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றே வலியுறுத்தினார்கள்.

இருப்பினும் பதற்றமான நிலைமையை தோற்றுவிக்க விரும்பவில்லை. சட்டங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதால் அதனைக்கூட சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்ற மனநிலையில் பொறுமை காத்து வருகின்றோம். மாணவர்களின் விடுதலைக்காக அரசியல் பேதமின்றி பலதரப்பினரும் முன்வந்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகளை கூறுவதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதில் பின்னடிப்புக்களைச் செய்தாலோ அல்லது எதிர்காலத்தில் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தாலோ நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கப்போவதில்லை.

அரசாங்கத்துடன் மல்லுக்கட்ட வேண்டும் என நாம் சிந்திக்கவில்லை. ஆனால் மாணவர்களின் சக்தி மாபெரும் சக்தி என்பதையும் உணரச்செய்வதோடு ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும், எமது மக்களும் நிச்சயமாக சனநாயக ரீதியில் வீதிக்கு இறங்குவதில் பின்னிற்கப் போவதில்லை. இதற்கு அனைத்து தரப்பினரதும் ஆதரவும் கிடைக்கும் என்ற பெருநம்பிக்கையும் எமக்குள்ளது. தற்போது மாணவர்களின் விடுதலைக்காக நாம் செல்லும் சுமுகமான பயணம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஒருவேளை அதில் தோல்வியைச் சந்தித்தால் அவர்களின் விடுதலைக்கான குரல் ஓங்கி ஒலிக்கும். அதேநேரம் சனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவோம். அச்சமயத்தில் நாம் பின்னிற்கப்போவதில்லை என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றோம்