சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தல் – தமிழ் இனம் தனது தனித்துவத்தைப் பேணுவதே காலத்தின் தேவை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

281

சிறீலங்காவின் எட்டாவது அரச தலைவர் தேர்தல் பிரச்சாரங்கள் தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள போதிலும், தமிழர் தரப்பு மிகவும் ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது. அதாவது முழுக்க முழுக்க சிங்கள தேசத்துக்கான இந்த தேர்தலில் தமிழ் மக்கள் பங்குபற்றுவதன் மூலம் என்ன பயனைப் பெற்றுவிட முடியும் என்பதே தமிழ் மக்களிடம் எழுந்துள்ள தற்போதைய மில்லியன் டொலர் கேள்வி.

அதாவது இதற்கு முன்னைய தேர்தல்களில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு சிங்கள தேசத்தின் அரசியல் தலைவர்கள் எந்த நன்மையையும் செய்துவிடவில்லை.

மாறாக திட்டமிட்ட இனஅழிப்பு, நில அபகரிப்பு, தமிழ் மக்களின் கலாச்சாரங்களை சீரழிக்கும் நிகழ்வுகள், தமிழ் மக்களின் பிரதேசங்களில் தொடர்ந்து தங்கியிருக்கும் சிறீலங்கா படையினர், அவர்களினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், சிங்களக் குடியேற்றங்கள், சட்டவிரேதமாக நிறுவப்படும் பௌத்த ஆலயங்கள், அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்த மற்றும் தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தி தண்டனை பெற்ற படையினரை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைத்து துன்புறுத்துதல், போரின் பொது இனஅழிப்பில் ஈடுபட்ட படை அதிகாரிகளைக் காப்பாற்றுதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொண்ட படையினரைக் காப்பாற்றுதல் என தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிறீலங்கா அரசுகளின் தமிழின விரோதப் போக்கிலும் அவர்களின் மனநிலையிலும் எந்த மாற்றங்களும் இதுவரையிலும் ஏற்படவில்லை.

தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஆதரவுகளை வழங்கி பல தடவை அவர்களை நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிய போதும் அவர்கள் மாறவில்லை என்பதை விட அவர்கள் தமது கொள்கைகளை மாற்றவில்லை.

அது மட்டுமல்லாது இந்திய மற்றும் மேற்குலகத்தின் நலன்களை முதன்மைப்படுத்துவதன் மூலம் அதன் ஊடக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் மூலம் தமிழ் இனம் தனக்குரிய உரிமைகளையும், நீதியையும் பெற்றுவிட முடியும் என மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியையே சந்தித்துள்ள என்று கூறலாம் அல்லது தமிழ் மக்கள் இந்த வல்லாதிக்க சக்திகளால் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் எனக் கூறலாம்.

எனவே தான் இந்த தேர்தலில் இருந்து தமிழினம் தனது தனித்துவத்தைப் பேணி சிங்கள தேசத்தில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்தி தனக்கென ஒரு அடையாளத்தை பேணவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனையே நாம் தேர்தல் புறக்கணிப்பு எனக் கூறுகின்றோம். ஆனால் தேர்தல் புறக்கணிப்பு என்பது வாக்களிக்கும் நிலையங்களுக்கு செல்லாமல் விடுவது ஒரு முறையாக இருக்கும் போதும், இனவாதக் கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் உட்பட தென்னலங்கை பெரும்பான்மைச் சிங்களவர்களைப் புறக்கணித்து தமிழர் ஒருவருக்கு வாக்களிப்பதும் தேர்தல் புறக்கணிப்பாகவே கொள்ளப்படும்.

ஏனெனில் 74 சதவிகிதற்திற்கும் மேற்பட்ட சிங்களவர்களைக் கொண்ட நாட்டில் தமிழர் ஒருவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் மூலம் அவர் அரச தலைவர் ஆக முடியாது என்பதை உலகம் மட்டுமல்ல தமிழ் மக்களும் நன்கு அறிவார்கள். ஆனால் சிங்கள இன மக்களுக்கு ஒரு நீதி தமிழ் இன மக்களுக்கு ஒரு நீதி என்று ஆட்சி நடைபெறும் நாட்டில் தமிழ் மக்கள் தனித்து இயங்குவதே தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமானதாக அமையும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

அனைத்துலக மட்டத்தில் நல்ல உறவுகளைப் பேணும் ஒருவரை தென்னிலங்கையில் அரச தலைவராக்கி அவரின் மூலம் சிங்கள மக்களும், சிங்களப் படையினரும் உல்லாசமான வாழ்க்கை வாழ்வதற்கு தமிழ் மக்கள் தமது உரிமைகளை தியாகம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதே அவர்களின் கருத்து.

எமது எதிரிக்கு நெருக்கடிகள் குறைந்து அவன் சுதந்திரமாகச் செயற்படும் போது தான் ஏனைய இனங்களுக்கு அவன் பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை வகுக்க முடியும். ஆனால் நாம் எப்போதும் எமது எதிரியையும், அவனது மக்களையும் நெருக்கடிக்குள் வைத்திருப்போமானால் நாம் அவனுக்கு பேரழிவை ஏற்படுத்த தேவையான திட்டங்களை வகுக்க முடியும்.

மகிந்த ராஜபக்சா அரசுடன் தமிழினம் நேரிடையாக மோதிக் கொண்டது, போரின் போது மிகப்பெரும் இன அழிப்பை அவர்கள் மேற்கொண்டனர், அதற்கு பிராந்திய வல்லரசுகளும், உலக வல்லரசுகளும் உதவிகளை வழங்கின.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும் திட்டமிட்ட இன அழிப்பை அவர்கள் தொடர்ந்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த ரணில் மற்றும் மைத்திரிபால சிறீசேன அரசுகள் கூட மகிந்த அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்களை நிறுத்தவில்லை. எதிலும் மாற்றம் இடம்பெறவில்லை. எனவே ஒருவரை இனப்படுகொலையாளி என்பதன் மூலம் ஏனைய சிங்களத் தலைவர்களின் கைகளில் மறைந்துள்ள குருதிக்கறைகளை தமிழ் மக்கள் கழுவ வேண்டிய தேவையில்லை.

அவ்வாறு நாம் செய்வது கூட எமக்கு நன்மை பயக்காது, மாறாக உலக அரங்கில் அங்கிகாரம் பெற்ற ஒருவர் பதவியில் அமருவதன் மூலம் சிங்கள இனம் சுகபோகங்களை அனுபவிப்பதுடன், அவர்கள் தமது இனஅழிப்பையும் தொடரவே செய்வார்கள்.

ஜே.வி.பியைப் பொறுத்தவரையில் அவர்களும் இனவாதத்திற்குள் மூழ்கிப்போனவர்களே. இங்கு ஒவ்வொரு கட்சிகள் செய்த இன அழிப்புக்களையும் கூறுவதாக இருந்தால் இந்த பத்தியில் இடம்போதாது, ஆனால் சிறு உதாரணமாக இந்திய- இலங்கை ஒப்பத்தத்தின் மூலம் தமிழ் இனம் பெற்றுக்கொண்ட மிகச் சிறு நன்மை என்பது 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்குமே, ஆனால் அதனை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டது ஜே.வி.பி என்பதை நாம் மறந்துவிட முடியாது.

13 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்த இந்தியாவே தனது படையினரின் மூலம் பல ஆயிரம் தமிழ் மக்களைப் படுகொலை செய்த பின்னரே அதனை எமக்கு விட்டுச் சென்றது.

அதாவது சிறீலங்காவில் ஆட்சிக்கு வரும் எந்த அரச தலைவரும், இனப்படுகொலையில் ஈடுபட்ட தமது படையினர் தண்டிக்கப்படுவதை விரும்பப்போவதில்லை. அதனை தான் சஜித் பிரேமதாசாவும், கோத்தபாயா ராஜபக்சாவும் தென்னிலங்கையில் மேற்கொண்ட தமது பிரச்சாரக் கூட்டங்களில் தெரிவித்துள்ளனர்.

அதாவது அனைத்துலக சமூகம் நேரிடையாகத் தலையிடாத வரையிலும் தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியையும், தமது உரிமைகளையும் பெற்றுவிட முடியாது. அதனை நாம் கடந்த காலங்களில் பட்ட அனுபவங்களின் மூலம் நன்கு தெரிந்து கொண்டுள்ளோம்.

அனைத்துலக சமூகமோ அல்லது மேற்குலகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறீலங்கா மீது ஒரு அழுத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றால் இனங்களுக்கு இடையிலான முனைவாக்கம் விரிவாக்கம் பெறவேண்டும். அதற்கு நாம் எமது செயற்திட்டங்களில் பிரிந்து வாழ்கின்றோம் என்பதை உணர்த்த வேண்டும். அதுவே அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பின் அடிப்படை எண்ணக்கருவாகும்.

சிங்கள தேசத்துடன் இணைந்து, அவர்களுடன் கலந்து வாழ்ந்து, முழுக்க முழுக்க சிங்கள தேசத்துக்கான தேர்தலில் பங்கெடுத்து, நல்லதொரு சிங்களத் தலைவரை சிங்கள இனத்திற்கு தெரிவுசெய்து கொடுத்துவிட்டு நாம் பிரிந்து வாழ்கின்றோம், தமிழ் இனம் தனித்தன்மையும், தன்னாட்சிக் கோட்பாட்டுடன் வாழக்கின்றது என நாம் கூறுவோமாக இருந்தால் எம்மை இந்த அகிலம் கேலியாகவோ அல்லது பரிதாபத்திற்குரியவர்களாகவோ தான் பார்க்கும்.