13ஆவது திருத்தத்தை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்- கோ.கருணாகரம்

369 Views

13ஆவது திருத்தத்தை

“அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது“ என்று  பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்,

“அரசியலமைப்பின் ஒரு அங்கமான 13ஆவது திருத்தம் உங்களால் எவ்வாறு கையாளப்படுகிறது. அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது.

ஒரு காலத்தில் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்த சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திசாநாயக்க போன்றோரே 13ஆவது திருத்தத்தின் உண்மையான அமுலாக்கத்துக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவான தங்களது நிலைப்பாட்டை மாற்றி வருகின்ற நிலைமையில், பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபை வரைந்த சட்டப் பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இது தொடர்பாக கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்த நாடு சுபிட்சமான நாடாக திகழ வேண்டுமானால், நீங்கள் உங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும் என்று கூறிக் கொள்கிறேன். அத்துடன், இன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களது சம்பளப்பிரச்சினைக்காக வீதிக்கு வருகின்றார்கள். ஆக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றார்கள். அவர்களை நிரந்தரமாக்கி குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்காவது நீங்கள் முன்வரவேண்டும்” என மேலும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply