சிறுபான்மையினருக்கெதிராக பிரயோகிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவன ஈர்ப்பு பேரணியொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பெண்கள் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து அமைதியான முறையில் பறை இசை முழங்க ஆரம்பமான குறித்த பேரணி, மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையம் வரையில் வருகைதந்ததுடன் அங்கு அரசாங்கத்திற்கான மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வாரம் கடந்த நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் 10ஆம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பெண்கள் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘வன்முறைகளற்ற வீடும், நாடும் எமக்கு வேண்டும், பெண்களுக்கு பாரபட்சமான சட்டத்தினை திருத்த வேண்டும், நீதிகோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம், வன்முறைகளற்ற ஒரு கௌரவமான சமூகத்தினை உருவாக்க ஒன்றிணைவோம், பசியும் வன்முறைகளுமின்றி தன்னிறைவாக வாழ்வோம்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.