‘குறைந்த வருமானம் பெறும் நாடு ‘ பிரகடனம் இலங்கையை மீட்குமா?

111 Views

WhatsApp Image 2022 10 14 at 8.07.56 PM 'குறைந்த வருமானம் பெறும் நாடு ' பிரகடனம் இலங்கையை மீட்குமா?

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் தவிக்கும் இன்றைய நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான ஒரு உபாயமாக குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையைத் தரமிறக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதன் பின்னணி என்ன, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன போன்ற விடயங்களையிட்டு கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை சிரேஷ்ட விரிவுரையாளா் கலாநிதி எம்.கணேசமூா்த்தி உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை இங்கு தருகிறோம்.

கேள்வி  – இலங்கையை மத்திய வருமானம் பெறும் நாடுகளிலிருந்து, குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில் – இலங்கையைப் பொறுத்தவரையில் அதனுடைய தலா வருமானத்தின் அடிப்படையில் பாா்க்கின்றபோது நடுத்ததர வருமானம் கொண்ட நாடாக இருக்கின்றது. இதனை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுமாறு ஒரு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தால் சலுகைக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.

உலக வங்கியிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. இருந்தபோதிலும் ஓகஸ்ட் மாதத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், இலங்கைக்கு தாம் நேரடியாக எந்தவிதமான உதவிகளையும் வழங்கப்போவதில்லை எனவும், ஏனைய நாடுகளுடன் இணைந்தே இதனை வழங்க முடியும் எனவும் அறிவித்திருந்தது. இதன் அா்த்தம் என்னவென்றால், சா்வதேச நாணய நிதியத்துடனான கடன்களைப் பெறுவதற்கான உடன்படிக்கைகள் எதுவும் இடம்பெறாத நிலையில் உலக வங்கியுடன் உதவப்போவதில்லை என்பதுதான் அதன் அா்த்தம். உலக வங்கி கைவிரித்துவிட்ட பின்னா் ஆசிய அபிவிருத்தி வங்கியை இலங்கை நாடியது. அதுவும் வெற்றிபெறவில்லை.

இப்போது இலங்கைக்கு கடன்பெறுவதற்கு வேறு வழிகள் இல்லை. சா்வதேச நாடுகளிடமும் கடன்பெற முடியவில்லை. நட்பு நாடுகளும் கடன்தரமுடியாது எனக்கூறிவிட்டன. குறிப்பாக இந்தியா இதனை வெளிப்படையாகவே சொல்லிவிட்டது. இனிமேல் கடன்தர முடியாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஜப்பானிடமும் சென்று பாா்த்தாா்கள். அதுவும் சரிவரவில்லை.

ஆக, இன்றுள்ள ஒரே வழி, நாம் வறிய நாடு என எம்மை வகைப்படுத்தி உலக வங்கியிடமிருந்து பெறக்கூடிய சலுகைக்கடன்களைப் பெறுவதற்கு இப்போது முற்பட்டிருக்கின்றாா்கள். இதுதான் நடந்தது. இதனை சுருக்கமாகச் சொன்னால், ஒரு நாடு தன்னுடைய அந்தஸ்த்தை இழந்து – அல்லது குறைத்துக்கொண்டு நான் ஏழை நாடு என்ற அடிப்படையில் உதவிகளைக் கோருகின்றது. அதுதான் நிலைமை.

கேள்வி – அரசியல் ரீதியாக இது இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்கள் என்ன?

பதில் – அரசியல் ரீதியான பாதிப்பு எனச்சொல்கின்ற போது இலங்கையின் கௌரவத்துக்கு இது ஒரு பெரிய பாதிப்பு என்றுதான் சொல்லவேண்டும். அமைச்சரவையில் தீா்மானம் எடுக்கப்பட்டதாக செய்தி வெளிவந்த பின்னா் ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. அதில், அவ்வாறில்லை. இலங்கை தொடா்ந்தும் ஒரு மத்திய வருமானம் பெறும் நாடாகத்தான் இருக்கும். ஆனால், தற்காலிகமாக ஒரு இடைவெளியாக இது அமையும் என்ற வகையில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை அமைந்திருந்தது. அதாவது, இலங்கை தொடா்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகத்தான் இருக்கும். ஆனால், கடன் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு குறுகிய காலத்துக்கு குறைந்த வருமானம் பெறும் நாடாக கருதி செயற்படுமாறு கேட்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் ஜனாதிபதி  ஊடகப்பிரிவின் விளக்கம். அந்த ரீதியில் பாா்க்கும்போது எதிா்க்கட்சிகள் இதனை தமது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன.

கேள்வி – அரசாங்கத்தின் இந்தப் பிரகடனம் நாடு எதிா்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வைக்கொண்டுவருவதாக அமையுமா?

பதில் – இதனை தற்காலிகமான ஒரு ஏற்பாடாக உலக வங்கி கருதி அதற்கேற்றவகையில் உதவிகளை வழங்க முன்வந்தால், இலங்கைக்கு நன்மைகள் கிடைக்கும். அதாவது எந்தவொரு இடத்திலிருந்தும் கடனைப்பெறமுடியாத நிலையில் இலங்கை இருக்கும் நிலையில் அதனைத் தளா்த்துவதற்கான ஒரு திட்டமாக இதனைப் பாா்க்க முடியும். தற்காலிகமாக ஒரு சலுகையை வழங்குமாறுதான் இவா்கள் இப்போது கேட்கின்றாா்கள். அந்த சலுகையை உவக வங்கி வழங்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

கேள்வி – இதேவேளையில், உலகளாவிய ரீதியில் உருவாகியுள்ள நெருக்கடிகள் காரணமாக, இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு, கடன் நிவாரணம் தேவைப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் என்ன?

பதில் – உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் இப்போது பாரியதொரு பின்னடைவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இது வெளிப்படையாகவே தெரிகின்றது. அந்த அடிப்படையில் 54 நாடுகள் சா்வதேசத்தின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு கடன் தேவைப்படுகின்றது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. இந்த அறிக்கையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதால், உதவி தேவைப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் உள்ளடக்க முடியும். இதனை அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்கு உதவி வழங்குமாறு இவா்கள் கேட்கலாம்.

இலங்கைக்கு ஏன் உதவிகள் கிடைக்காமல் இருக்கின்றது என்பதையிட்டும் இந்த இடத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இலங்கை தொடா்பாக சா்வதேசம் கொண்டிருக்கும் நிலைப்பாடு இப்போது மாற்றமடைந்து வந்திருக்கின்றது. இலங்கைக்கு சா்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் வேறு எந்த உதவிகளும் கிடைக்காது என்ற இறுக்கமான ஒரு நிலை காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைகூட உதவி செய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. மனித உரிமைகள் தொடா்பான காரணங்களைவிடவும், பொருளாதார ரீதியான காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கின்றது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட பொருளாதார நிலைமைகளை முன்னிறுத்தித்தான் இலங்கை தொடா்பான தீா்மானம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. பொருளாதாரத்தை சரியாக வழிப்படுத்துவதில் ஊழல், மோசடிகள் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடுகள் இலங்கையில் மோசமான ஒரு நிலையில் இருப்பதை நிதி வழங்கும் நிறுவனங்கள் உட்பட சா்வதேச நாடுகளும் கருதுகின்றன.

அந்த நிலைமையை மாற்றியமைக்காத வரையில் வழமையான கடன்களை அல்லது வணிகக்கடன்களைப் பெற்றுக்கொள்வது இலங்கைக்கு கடினமானதாகவே இருக்கும். இதுதான் இலங்கைக்கு தற்போதுள்ள பிரச்சினை.

கேள்வி – சா்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவாா்த்தைகள் தற்போது எவ்வாறான ஒரு கட்டத்தில் உள்ளது?

பதில் – இந்தப் பேச்சுவாா்த்தைகள் முன்னோக்கி நகர முடியாத ஒரு கட்டத்தில் இருப்பது போலத்தான் தோன்றுகின்றது. ஏனன்றால் சா்வதேச நாணய நிதியத்துடனான ஆளணி மட்டத்திலான ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும் கூட, கடன்னொடுத்திருப்பவா்களின் இணக்கப்பாடு மிகவும் முக்கியம். இதற்கு ஒத்துக்கொள்கின்றோம் என்றாவது அவா்கள் சொல்ல வேண்டும்.

இலங்கையின் கடன்களில் பிரதானமாக இரண்டு உள்ளன. ஒன்று சா்வதேச பிணைமுறிகள். இது சா்வதேச நிறுவனங்களிடமும் உள்ளது. நாடுகளிடமும் உள்ளது. தனிநபா்களிடமும் உள்ளது. ஆனால், இரு பக்க கடன் என்று சொல்லும் போது அதில் பெரும் பகுதி சீனாவிடம் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.  சீனா இந்த கடன் மீளளிப்புக்கு ஒத்துக்கொள்ளாத வரையில் சா்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவாா்த்தைகள் முன்னோக்கி நகரக்கூடிய வாய்ப்புக்கள் மிக மிக அரிதாகவே இருக்கும்.  சீனா இவ்விடயத்தில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வராத வரையில் ஐ.எம்.எப் உடனான இணக்கப்பாடு சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும். இவ்வியத்தில் சீனா என்ன சொல்லப்போகின்றது என்பதை வைத்துக்கொண்டுதான் நாம் அடுத்த கட்டத்தைப் பாா்க்கமுடியும்.

Leave a Reply