தமிழர் தன்னாட்சிக் கோரிக்கைக்கு இந்தியா உதவுமா?

கேள்வி -பெரும் துன்பங்களை சந்தித்து வரும் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தன்னாட்சியைப் பயன்படுத்த முடியாத  எல்லைகளில்  இருக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதற்கு ஐ.நா சிறப்பு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இதற்கு இந்தியா துணை செய்யுமா?

தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

 பதில்

”தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்ற முப்பெரும் முழக்கங்களும் ஒரே முழுமையின் மூன்று கூறுகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை ஒரு சூலாயுதத்தின் மூன்று முனைகள்தாம்.

தாயகம் (HOMELAND) என்பதன் பொருள் இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு (இணைந்த வடக்கும் கிழக்கும்) ஈழத் தமிழர்களின் மரபுவழித் தாயகம் என்பதே. தேசியம் (NATIONHOOD) என்பதன் பொருள் வடக்கு-கிழக்கில் வாழ்ந்து வரும் தமிழர்கள் ஒரு தேசமாக (அல்லது தேசிய இனமாக) அமைந்துள்ளனர் என்பதே, தன்னாட்சி (SELFDETERMINATION) என்பது ஈழத்தமிழ்த் தேசம் தன் அரசியல், பொருளியல், பண்பாட்டு வாழ்வைத் தீர்மானித்துக் கொள்ளவும், பிற தேசத்துடன் இணைந்து வாழவோ தனியாகப் பிரிந்து செல்லவோ உரித்துடையது என்பதே.

இந்த முப்பெரும் முழக்கங்களைப் பொருட்படுத்தும் படியான தமிழீழத் தேசிய இயக்கங்கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டிருப்பதன் ஆவணச் சான்றுதான் 1985 சூலை 13 திம்பு சாற்றுரை. திம்பு சாற்றுரையிலிருந்து விலகிக் கொள்வதாக எந்தத் தமிழ்த் தேசிய அமைப்பும் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகும் அறிவிக்கவில்லை. இந்த அமைப்புகளின் 2015 தேர்தல் அறிக்கைகளில் மீண்டும் இந்த முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

ஈழத் தமிழர் தாயகத்தையோ, ஈழத் தமிழ்த் தேசியத்தையோ, ஈழத் தமிழ்மக்களின் தன்னாட்சியையோ ஏற்றுக் கொள்ள மறுத்த சிங்களப் பேரினவாத அரசுதான் இனவழிப்புக் குற்றம் புரியும் வரை சென்றது. ஈழத் தமிழர் அடைந்து வரும் துன்பங்கள் அனைத்துக்கும் கடந்த காலத்திய நேர் இனவழிப்பும் இன்றைக்கும் தொடர்ந்து வரும் கட்டமைப்பியல் இனவழிப்புமே அடிப்படை என்பதை அறிந்தேற்க மறுத்துக் கொண்டே தமிழர் தன்னாட்சிக்கு உதவுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

தாயகம்-தேசியம்-தன்னாட்சிக்கான நீண்ட போராட்டத்தில் பல்வேறு இடைக்காலக் கோரிக்கைகளுக்காகவும், பகுதிக் கோரிக்கைகளுக்காகவும் போராட வேண்டி வரும். இத்தகைய ஒரு கோரிக்கைதான் தமிழர் தன்னாட்சிக்கான ஐநா பேராளரை அமர்த்த வேண்டும் என்பது. இந்தக் கோரிக்கைக்காகப் போராடுவதில் பிழை இல்லை.

ஆனால் இதற்கு இந்தியா துணை செய்யுமா? என்று கேட்பது எல்லாவற்றுக்கும் துணை செய்யும் இந்தியா இதற்கும் துணை செய்யுமா? என்று கேட்பது போல் உள்ளது. அடிப்படையில் தமிழர்களின் நீதிக் கோரிக்கை எதற்கும் துணை செய்யாத இந்தியா இதற்கு மட்டும் எபபடித் துணை செய்து விடும்?

இந்தியா இனவழிப்புக் குற்றச்சாட்டிலிருந்து சிங்களத்தைக் காப்பாற்றுகிறது என்பது அரைப் பார்வைதான். சிங்களத்தைக் காப்பாற்றுவதன் மூலம் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்கிறது என்பதுதான் முழுப் பார்வை. இந்த உண்மை சில தமிழர்களுக்குக் கசப்பாகவும் கடினமாகவும் இருப்பதாலேயே உண்மையல்லாததாகி விடாது.

இந்தியாவின் மோசமான அணுகுமுறையை நியாயப்படுத்திப் பற்பல வாதுரைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று: சீனத்துடனான இந்தியாவின் போட்டி. இரண்டு: இந்தியா ஒரு ‘பிராந்திய’ (வட்டார)  வல்லரசு என்பது. மூன்று: தமிழர்கள் இனவழிப்புக்கு ஆளாகி நலிந்த நிலையில் இருக்கும் போது இந்தியாவின் தயவில்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது.

இவற்றில் எதுவும் இந்தியா ஈழத் தமிழருக்கெதிரான இனவழிப்புக்கு உடந்தையாகச் செயல்பட்டதற்கோ, இன்றும் தமிழர்களுக்கு நீதி மறுக்கும் முயற்சிகளுக்குத் துணை போவதற்கோ நியாயமாகாது. சிங்கள அரசு தமிழர்களை இனவழிப்புச் செய்வதற்கும் இதே போன்ற நியாயங்களைச் சொல்ல முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

ஒரு பின்குறிப்பு: கொழும்பு துறைமுகத்தில் இன்னொரு பெட்டக முனையத்தையும் அதானி குழுமத்துக்கே கொடுக்க வேண்டும் என்று தமிழமைப்புகள் ஒரு கோரிக்கை வைத்து, அதற்குக் கைம்மாறாக தமிழர் தன்னாட்சிக்கு ஐநா சிறப்புப் பேராளர் அமர்த்த இந்தியா ஆதரவு தர வேண்டும் என்று கேட்டால் நரேந்திர மோதிஜி கருதிப்பார்க்க வாய்ப்புண்டு. சரியா?”

 தோழர் செந்தில்(இளந்தமிழகம்)

 பதில்-

 சிங்கள அரசியலைப் பொருத்தவரை ஒரே நாடு, ஒரே தீவு, ஓரே மொழி, ஒரே மதம், ஒரே அரசு என்ற தம்மதீபக் கோட்பாட்டில் கட்டுண்டு கிடக்கிறது. எவ்வித அதிகாரப் பகிர்வுக்கும் அவர்தம் அரசியலில் இடமில்லை. இனி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பையோ அல்லது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வையோ அவர்கள் ஏற்கப் போவதில்லை. 13 ஆவது சட்டத்திருத்தம் என்பது 1978 அரசமைப்பில் கொண்டுவரப்பட்டதாகும். இனியொரு அரசமைப்பு வருமாயின் அது 1978 அரசமைப்பை ஒத்து இருக்க முடியுமே ஒழிய எவ்வித அதிகாரப் பகிர்வும் அதில் இருக்கப் போவதில்லை.

எந்தவொரு வெளியரசும் இலங்கை தீவில் தலையிட்டு அதிகாரப் பகிர்வுக்கு கட்டாயப்படுத்துமாயின் அதை எதிர்த்து திலீபனைப் போல் நூறு புத்த பிக்குகள் பட்டினி கிடந்தோ அல்லது பற்ற வைத்துக் கொண்டே மாண்டு போவர். இந்திய அரசைப் பொருத்தவரை 13 ஆவது சட்டத்திருத்தம் என்று பேசுவதெல்லாம் சிங்கள அரசியலைக் கொதிநிலையில் வைத்திருப்பதற்கான  நோக்கத்தில் செய்வதாகும்.

தமிழர்களைப் பொருத்தவரை அளவுக்கு அதிகமாகவே குருதி சிந்திவிட்டனர்; கல்லறைகளை நிரப்பிவிட்டனர்.  முள்ளிவாய்க்காலுக்கு முன் குவித்த வானுயர்ந்த வெற்றிகளையும் முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய அதலபாதாள தோல்வியையும் நெஞ்சில் நிறுத்தி சிந்திப்போம்.  பன்னாட்டு, அண்டைநாட்டு, உள்நாட்டு நிலைமைகளைத் தமிழர்கள் கையாண்ட முறைதான் வெற்றித் தோல்விகளாக வெளிப்பட்டன. ஈழப் பிரச்சனை பிராந்திய, உலக வல்லரசியப் போட்டி அரசியல் பிரச்சனையாகும். சிங்களவரும் தமிழரும் சண்டையிட்டு தீர்வுகாணும் பிரச்சனை அல்ல இது. எனவே, சிங்களரா? தமிழரா? யாருக்கு தோள்வலிமை உண்டு என்பதல்ல பிரச்சனை. யார் காணப்படும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு காய் நகர்த்துகின்றனர் என்பதே பிரச்சனை.

நேரடியாக சொன்னால் இன்றளவில் இந்திய அரசின் நிலைப்பாடே மேற்குலகின் நிலைப்பாட்டை நிர்ணயிக்கிறது. இது புதிய செய்தியல்ல, இந்தியாவைப் பகைத்தலாகாது. அதேநேரத்தில் இந்தியாவின் பாதத்தில் விழுந்து கிடத்தலும் ஆகாது. ஈழம் – இந்தியா இரு நாட்டு நலன்களும் ஒன்றுபடும் புள்ளியை அடையாளங் கண்டு செயல்படுத்த வேண்டும். இதில் தமிழ்நாட்டின் பங்கை சரிவர புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசை உந்தித் தள்ள வேண்டும். ஈழத் தமிழர்கள் இந்திய அரசைப் பற்றியிழுக்க வேண்டும். இதில் இரு தரப்பாரின் விசையும் எதிர்திசையில் இருக்கும். ஆனால் விளைவு ஒரே திசையில் இருக்கும். இந்த கலையைக் கைவரப் பெறுவதிலேயே ஈழத்தமிழர் எதிர்காலம் இருக்கிறது. ஈழத்தமிழர் மீது அன்பு கொண்டவர்கள் ஈழம் – தமிழ்நாடு – இந்தியா என்ற மூன்றினது உறவு நிலை குறித்து விவாதிக்க வேண்டும், சிந்த்க்க வேண்டும். தீர்வு காண வேண்டும்.

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதற்கு இணங்க தமிழர் தம் அரசியல் தீர்மானங்களே வெற்றிக்கு வெற்றிலை பாக்கு வைப்பதா? அல்லது தோல்விக்கு பட்டுக் கம்பளம் விரிப்பதா? என்பதை தீர்மானிக்கின்றன.

ஒன்று இலங்கை துண்டாடப்பட வேண்டும் அல்லது ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்களைப் போல் பெளத்த சிங்களத் தீவில் கரைத்துவிடப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் பல்கலைக்கழகத்தில் பாடம் எடுத்தப்பின் வரலாற்று அன்னை மேற்படி இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு ஈழ்த் தமிழர்களிடம் கட்டளையிட்டு நிற்கிறாள். ஈழத் தமிழர்களே இனி முடிவு செய்ய வேண்டும்.