புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | செல்வின் – செவ்வி

தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா

தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில் உள்ளதா? தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுடன் இந்த வாரம் சமூக பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை தனது  கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்றார்.

கேள்வி:
நாட்டின் பொருளாதார நெருக்கடி அடுத்துவரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சொல்கின்றார்கள். இது உண்மைதானா? இதற்குக் காரணம் என்ன?

பதில்:
அடுத்துவரும் மாதங்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமடையும் எனச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், இப்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள், மருந்துகள் என்பன குறைந்துபோவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. ஏனெனில் இப்பொழுது இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான பணத்தை இந்தியா உட்பட சில நாடுகள் வழங்கும் கடன்களின் மூலமாகவே பெற்றுக்கொள்கின்றோம். அவர்கள் கொடுத்துள்ள இந்தக் கடன்தொகை பெரும்பாலும் இந்த மாதத்துடன் முடிந்துவிடும். அன்பளிப்பாக கிடைத்த தொகையும் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் உடனடியாக வேறு கடன்களோ அன்பளிப்புக்களோ கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான நீண்டகாலத் திட்டம் எதுவும் இல்லாமல் உடனடியாகத் தெரியக்கூடிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கண்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதன் காரணமாக உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் வரப்போகின்றது என்பது தெரிகின்றது. இது முன்னரே உணரப்பட்ட ஒன்றுதான். ரணில் பிரதமராக வந்த பின்னர்தான் சொல்லப்படும் விடயமல்ல இது. ஜனவரியிலேயே இது சொல்லப்பட்டது.

அரசாங்கமோ அமைச்சர்களோ மக்களுடன் பேசவில்லை. உணவு உற்பத்தி போன்றவற்றில் ஈடுபடுங்கள் என மக்களை தூண்டவில்லை. உணவுற்பத்திப் போரில் ஈடுபடுங்கள் என மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தவில்லை. அரசியல்வாதிகள் தங்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம் ஒன்றைத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்படப்போகின்றது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் உதவுங்கள். பணத்தை அனுப்புங்கள் என தொடர்ந்தும் இவர்கள் இரந்து கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இப்படியே கேட்டுக் கொண்டிருந்தால் கடனைப் பெறமுடியாத ஒரு கட்டம் வரும். இது ஒரு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். சிறு கைத்தொழில்கள் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது. அதே வேளையில் நாளாந்த கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுக்கொண்டு செல்கின்றது.

கேள்வி:
பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரதமர் ரணிலின் உபாயங்கள் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்:
அங்கு ஒரு உபாயமுமே இல்லை. மடிப்பிச்சை எடுப்பதற்காக உலகமெல்லாம் சென்று தன்னுடைய நட்பைப் பயன்படுத்தி மேற்கு நாடுகளின் நிகழ்சி நிரலுக்குள் சரணைடைவதற்கான திட்டங்களை அவர் முன்னெடுக்கின்றாரே தவிர, பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவிதமான மூலோபாயங்களையும் அவர் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இதற்கான தந்திரோபாயம் ஒன்று அவரிடம் இருக்குமாக இருந்தால் அவரிடம் மிகப்பெரிய ஆளணி ஒன்று இருக்கவேண்டும். பிரதம அமைச்சர் பதவியையும் நிதி அமைச்சர் பதவியையும் அவர் சுமப்பதிலிருந்தே தெரிகின்றது அவரிடம் சரியான ஆட்கள் இல்லை என்பது. தமக்கு நம்பிக்கையாகச் செயற்படக்கூடியவர்களை அவர் உருவாக்கவில்லை என்பது தெரிகின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்வது?

வெடித்துக்கொண்டிருக்கின்ற வீட்டுக்கு வெள்ளையடித்து பூச்சுபூசுகின்ற வேலைதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நாட்டை நீண்ட பொருளாதாரப் பாதையில் வழிநடத்துவதற்கு இவரிடம் எந்த விதமான மூலோபாயமும் இல்லை. எந்த வட்டிக்கடையில் போய்வாங்கி இப்போதிருக்கின்ற 51 பில்லியன் கடனை 75 பில்லியன் கடனாக உயர்த்திவிட்டு தப்பியோடலாம் என்பதையிட்டுத்தான் அவர் சிந்திக்கிறார்.

கேள்வி:
ஒரு ரில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக பிரதமர் கூறியிருக்கின்றார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட பணமில்லாமையால் அதனை அச்சிட வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகள் என்ன?

பதில்:
குறைந்த அளவு பொருட்கள் இருக்கும் நிலையில் கூடியளவு பணம் மக்களின் கைகளில் இருந்தால், பொருட்களின் விலை கூடும் என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு பொருளாதாரக் கோட்பாடு. தொடர்ந்தும் இவர்கள் பணத்தை அச்சடித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். இவ்வாறு அச்சடித்து வெளியிடும் பணத்தை எவ்வாறு திரும்ப எடுப்பது?

அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு ஏனைய தேவைகளுக்கும் பணம் தேவை. இதற்குத் தேவையான பணத்தை வரிகள் மூலமாக அல்லது, ஏற்றுமதி வருமானமாக அல்லது உள்நாட்டு வருமானங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் பெருமளவு வரிச்சலுகைகளை வழங்கியதால் அதன்மூலம் பெறப்படக்கூடிய வருமானம் கிடைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் இது குறித்து இலங்கை மீது சீற்றத்துடன்தான் இருக்கின்றது. இதனைவிட வரக்கூடிய வருமானங்கள் எல்லாம் திறைசேரிக்கு எவ்வாறு போகின்றது என்ற கேள்வி இருக்கின்றது. இந்த நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமானால் என்ன செய்வது? பணத்தை அச்சடித்துக்கொடுப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை.

இந்தப் பணம் முழுவதும் சந்தைக்கு வரும். ஆனால், அதற்குரிய பொருட்கள் சந்தைக்கு வராது. மக்கள் தம்மிடமுள்ள பணத்தைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க முற்பட பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும். இவ்வாறு வெளியேவிட்ட காசை அரசாங்கம் திறைசேரி உண்டியல்கள் மூலமாகவோ வேறு வழிகளிலோ மீண்டும் உறிஞ்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் பொருளாதாரம் ஒரு சீரான நிலைக்கு வராது. இதற்கான எந்தவிதமான திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை.

கேள்வி:
புலம்பெயர்ந்த மக்கள் அதிகளவுக்கு முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும் என பிரதமர் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். இந்தக் கோரிக்கையை ஏற்கும் நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உள்ளார்களா?

பதில்:
புலம்பெயர்ந்த மக்கள் இந்த நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வருகின்றார்கள் என்றால், அவர்கள் ஒரு தார்மீக உடன்பாட்டுடன்தான் அதனைக் கொண்டு வருவார்கள். எமது சமூகம் இங்கு இருக்கின்றது. அதன் எழுச்சிக்காக இந்த முதலீடுகளைக் கொண்டு வருகின்றோம் என்பதாகத்தான் அது இருக்கும். அதேவேளையில் இந்த முதலீகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். குறைந்த பட்ச இலாபத்தைத் தந்தாலே போதுமானது என்பதாகத்தான் அவர்களுடைய விருப்பம் இருக்கும். அந்த வகையில் சமூக நலனும் சொந்த வர்த்தக நலனும் பின்னிப் பிணைந்ததாகத்தான் அவை இருக்கும்.

புலம்பெயர்ந்த மக்களுடைய முதலீடுகளை எடுத்தவுடன் பாரியளவில் கொண்டுவருவது சாத்தியமானதாக இருக்காது. ஏனெனில் இலங்கையின் நிர்வாக கட்டமைப்பு, மின்சாரத் தடை, போக்குவரத்து நெருக்கடி என பல விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

இதனைவிட அரசியல் தீர்வு என்பதைக் கைவிட்டுவிட்டார்கள். இப்போது 21 ஆவது திருத்தம் குறித்துத்தான் பேசப்படுகின்றது. முதலில் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு பின்னர் தான் 21 என இப்போது கூறுகின்றார்கள். இவர்கள் இவ்வாறு மாறிமாறிக் கதைக்கும் போது இவர்களை நம்பி புலம்பெயர்ந்த மக்கள் எவ்வாறு முதலீடுகளைக் கொண்டுவருவார்கள்?

இரண்டாவது – புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வடக்கு கிழக்குதான் தமது தாயகம் எனக் கருதி அங்கு முதலீடுகளைச் செய்வார்களாயின் அதற்கான சிறப்புப் பாதை ஒன்றை இவர்கள் திறப்பார்களா? அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை இல்லை. வடக்கு கிழக்கை தனியான ஒரு பொருளாதார பிரிவாக உருவாக்கி அதற்காக சிறப்பு செயலணி ஒன்றை உருவாக்கி அதற்குள் முதலீடுகளைச் செய்வதற்கு விரும்புபவர்கள் வந்து வெளிப்படையாகவும் துரிதமாகவும் தமது முதலீடுகளைச் செய்யக்கூடிய விதமாக அரசு தனது நிர்வாக கட்டமைப்பை உருவாக்குமா என்பதையிட்டு இதுவரையில் யாரும் பேசவில்லை.

இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்த மக்களை எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அழைப்பது? முதலீடு செய்ய முடியும் என நம்பி வந்து அலுத்து சலித்துப்போனவர்கள் பலர். இங்கு வந்து அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரிந்து வெறுத்துப்போய் திரும்பிச்சென்றவர்கள் அதிகம். அவர்கள் வேறு பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வதையிட்டு சிந்திக்கின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் சமூகம் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வது என்பது மிகவும் சவாலனது.

அரசாங்கம் இதற்கான செயலணி ஒன்றை உருவாக்க வேண்டும். அதேவேளை தமிழ் சமூகத்தின் சார்பிலும் இதற்கான செயலணி ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும்.

கேள்வி:
இன்றைய இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வடபகுதி மக்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய ஆலோசனை என்ன?

பதில்:
நாங்கள் ஏற்கனவே கணிசமான தூரத்துக்கு வீழ்த்தப்பட்டோம். ஆனால், அவ்வாறு வீழ்த்தப்பட்ட வேளையிலும் ஏதோ ஒருவகையில் எமது ஆற்றல்களை நிரூபித்தோம். எங்களுடைய இலக்கை உறுதி செய்தோம். அதற்கு ஒரு காரணம் இருந்தது. தலைமை இருந்தது. வழிகாட்டல் இருந்தது. ஒரு பொறுப்புச் சொல்லும் துணிவிருந்தது. இப்போது அப்படியொரு விடயமில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் கூட்டாக அந்த படிப்பினையின் அடிப்படையில் முன்னகர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இப்போது இலங்கை கைத்தொழில் மயமாக்கப்பட வேண்டும் எனச் சொல்கின்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. வடகிழக்கை கைத்தொழில் மயமாக்குவதையிட்டு யாருமே பேசவில்லை. வடக்கு கிழக்கை கைத்தொழில்மயமாக்க வேண்டும். பெரிய கைத்தொழில்களையிட்டு கனவு காணாமல் உங்களுடைய மூலப்பொருட்களைக் கொண்டு உங்களுடைய நாளாந்த பாவனைப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற சிறு சிறு கைத்தொழில்கள் அவசியம். அவை அடுத்த கடத்தில் ஏற்றுமதிப் பொருட்களாக மாறலாம். அவ்வாறான பொருளாதாரத்தை நாங்கள் கட்டியமைக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரசாங்க உத்தியோகம் பெற வேண்டும் போன்ற கனவுகளை விட்டுவிட்டு எமது பிள்ளைகளுக்கு யதார்த்தத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

வீண் செலவுகளைக் குறையுங்கள். அடுத்துவரும் மாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுமுறை வரும்போது புலம்பெயர் உறவுகள் பெருமளவுக்கு இங்கு வரப் போகின்றார்கள். அவர்கள் குறிப்பிட்டளவு நிதி இங்கு சந்தைக்குள் சுழலும். அதில் நிதானம்தேவை.

Tamil News